|
அரிதார ஆசை யாரை விட்டது? ஆர்மோனிய பொட்டியை திறந்தோமா, நல்ல தமிழுக்கு நாலு குத்து விட்டோமா என்றில்லாமல் ஹீரோவாகவும் முடிவு செய்துவிட்டார் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி.
டைலாமோ டைலாமோ, நாக்க முக்க என்று அர்த்தமில்லாத பல்லவிகளால் அதிர வைத்தவருக்கு, பிற சினிமா ஹரோக்களையும் அதிர வைப்பதில் சிக்கல் வராது என்று நம்புவோம். வருகிற 9 ந் தேதி கோலாகல விழா எடுத்து படப்பிடிப்பை துவங்கப் போகிறார்களாம். பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவிடம் தொழில் கற்றுக் கொண்ட சங்கர் என்பவர்தான் இந்த படத்தை இயக்கப் போகிறார்.
நான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இப்படத்திற்கு. புதுமுக ஹீரோக்களுடன் ஜோடி சேர முன்னணி ஹீரோயின்கள் தயக்கம் காட்டுவார்கள். அதனால் முதல்தர நாயகிகள் வீட்டு கதவை தட்டி கலவரத்தை மூட்டாமல், அழைத்தால் சரி சொல்கிற அடுத்த கட்ட நாயகியை தேடிப் போயிருக்கிறார்கள். இவர்களின் பார்வையில் சிக்கி நல்ல பெயர் எடுத்த ரூபாவை விஜய் ஆன்ட்டனிக்கு ஜோடியாக்கி விட்டார்களாம்.
திருதிரு துறுதுறு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர்தான் இந்த ரூபா. பஞ்ச் டயலாக் இருக்கோ இல்லையோ? மனசில பஞ்ச் வைக்கிற மாதிரி பாடல்கள் இருக்கும்கிறதை மட்டும் இப்போதைக்கு உறுதியா நம்பலாம்!
|