|
ராசு மதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மேடை கொள்ளாமல் விஐபிகள். (அதில் ஒரு நடிகை கூட இல்லை என்பது பெருத்த சோகம்) இப்படத்தை தயாரித்திருப்பது தேமுதிக பிரமுகரான மைக்கேல் ராயப்பன் என்பதால் விஜயகாந்தும் வந்திருந்தார்.
நல்லதானப்பா போயிட்டு இருந்திச்சு என்று பார்வையாளர்கள் அலுத்துக் கொள்ளும்படி ஒரு கருத்து மோதல் மேடையில். சேரன் பேசிய விஷயம் ஒன்றை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் பதில் சொன்னார் நடிகர் லாரன்ஸ். உளறிக் கொட்டினார் என்பது இன்னும் பொறுத்தம்.
முன்பெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரங்களும், விமர்சனமும் வந்தால் படம் ஒடும்ங்கிற நிலைமை இருந்திச்சு. ஆனால், இப்போ ஒரு படத்திற்கு ஒரு கோடி, ஒன்றரை கோடி செலவு செய்து சேனலில் விளம்பரம் செய்ய வேண்டியிருக்கு. அப்படி விளம்பரம் செய்யாத படங்களையும், சேனல் வாங்காத படங்களையும் அவங்க கண்டுக்கறதேயில்லை. பெரிய தயாரிப்பாளர்கள் பரவாயில்லை. சின்ன தயாரிப்பாளர்கள் என்ன செய்வாங்க, பாவம். இதுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் ஒரு வழி செய்யணும் என்றார்.
இந்த கருத்தை சரியாக புரிந்து கொள்ளாத லாரன்ஸ், ஏதோ சேனலுக்கு கிளிப்பிங்ஸ் கொடுக்க வேண்டாம் என்கிறார் சேரன் என்று நினைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். சேனல்ல க்ளிப்பிங்ஸ் போடுறதாலதான் படங்கள் நல்லா ஒடுது. தமிழ்படம் என்ற படத்துக்கு திரும்பி திரும்பி காட்சிகளை ஒளிபரப்பியதால்தான் அந்த படம் ஹிட் என்றார். (இதை தமிழ்படம் என்று கூட சொல்ல தெரியவில்லை அவருக்கு. தமிழ் தமிழ் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்)
பொது மேடைகளில் இதுபற்றி விவாதிக்க வேண்டாம். சேரனை தனியே அழைத்து பேசுகிறேன் என்று பதிலளித்தார் தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன். |