|
அடிபட்டார்.... ஆஸ்பத்திரிக்கு போனார்.... அப்புறம் என்னாச்சு என்று யாருக்கும் அக்கறையே இல்லை போலிருக்கிறது. படப்பிடிப்பில் குதிரையிலிருந்து விழுந்து முதுகு தண்டில் அடிபட்டிருக்கும் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை திரையுலக பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்கள். ஆனால் அவரது முதுகுதண்டு பிரச்சனை எந்தளவுக்கு இருக்கிறது என்ற தகவல் வெளிப்படையாக சொல்லப்படவில்லை.
அடிப்படையில் பாடி பில்டரான சரத், இந்த முதுகுதண்டு பிரச்சனையால் முன்பு போல வெயிட் தூக்க இயலுமா? இப்படியெல்லாம் அவரது கட்டுடல் மீது கவனம் வைத்த ரசிகர்கள் தவியாய் தவித்துக் கொண்டிருக்க, நமக்கு கிடைத்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
குப்புற தள்ளிய குதிரை குழியையும் பறிப்பதுதான் இயல்பு. நல்லவேளையாக இந்த குதிரைக்கு அந்தளவுக்கு வெறி இல்லை போலிருக்கிறது. குதிரை தள்ளிவிட்ட வேகத்தில் கீழே விழுந்த சரத்துக்கு முதுகு தண்டில் அடிதான். ஆனால் மயிரிழை அளவை விட குறைவான கீறல்தானாம் அது. முப்பது நாட்கள் முதுகில் கட்டு போட்டால் போதும். முன்பு போல இயல்பாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்களாம் மருத்துவர்கள். அடிபட்ட அந்த இடத்தில் தலையணையை வைத்துக் கொண்டு ரெஸ்ட் எடுத்து வருகிறார் சரத்குமார். |