|
புகைப்படம்! கதை, ஒளிப்பதிவு, இயக்கம், இசை என்று எல்லா ஏரியாவிலும் வெரிகுட் என்று புகழ வைத்த படம். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் சரியான தியேட்டர்கள் அமையாததால் ஒரு வாரத்திலேயே பெட்டிக்கு வந்துவிட்டது. ஆனாலும் படத்தின் இயக்குனர் ராஜேஷ்லிங்கத்துக்கு ஆறாத மனக்குறை. சூழ்நிலை பார்த்து ரிலீஸ் செய்திருந்தால் வெற்றிப்படமாக ஆகியிருக்குமே என்பதுதான் அந்த குறை.
மறுபடியும் தயாரிப்பாளரிடம் பேசி, இம்மாதம் 26 ந் தேதி கிராண்ட் ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டார். தமிழகம் முழுவதும் நல்ல தியேட்டர்கள் பேசப்பட்டன. முன்பை விட விளம்பரங்களையும் தடபுடலாக செய்து மக்களை கவரலாம் என்பது திட்டம். ஆனால் எல்லாம் நாசமா போச்சு என்பது மாதிரி ஒரு செய்தி அவர்கள் காதுக்கு வர, கதறி துடிக்கிறார்கள். என்னவாம்?
வருகிற வெள்ளிக்கிழமை இந்த படம் மறு ரிலீஸ். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை விஜய் டி.வியில் புகைப்படம் ஒளிப்பரப்பாகிறதாம். அதிர்ந்து போன இயக்குனர் சேனல் தரப்பில் விசாரித்தால் அங்குதான் இடிமேல் இடி. இப்படத்திற்கு இரண்டு தயாரிப்பாளர்களாம். அதில் ஒருவர்தான் சேனலுக்கு படத்தை விற்றிருக்கிறார்.
சொன்ன தேதியில் சேனலில் டெலிகாஸ்ட் செய்வேன் என்று இவரும், திரையரங்கில் ரிலீஸ் செய்தே தீருவேன் என்று இன்னொரு தயாரிப்பாளரும் மல்லுகட்ட, அழாத குறையாக நிற்கிறார் இயக்குனர் ராஜேஷ்லிங்கம். புகைப்படம் என்றாலே அழியாத நினைவுகள்தான். இவர்கள் மோதிக் கொள்வதை பார்த்தால், இது அழிக்க வேண்டிய நினைவுகளாக இருக்கும் போலிருக்கிறது. |