|
மாசிலா மணின்னு நினைச்சா, ஹீரோ காசிலேயே குறியா இருக்காரேன்னு கதறுகிற அளவுக்கு போய்விட்டது நகுலின் சம்பள ஆசை. யார் கால்ஷீட் கேட்டாலும் ஒன்றரை கோடி சம்பளம் கேட்கிறாராம். சில பல ஹிட் கொடுத்த டைரக்டர்களே நகுலுக்கு கதை சொல்லிவிட்டு தயாரிப்பாளர் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். காரணம், பட்ஜெட்டில் நகுல் சம்பளத்தை படிக்கிற தயாரிப்பாளர்கள் அந்த இடத்திலேயே மயக்கமடித்து மல்லாந்துவிடுவதுதான்!.
கந்தக்கோட்டை படத்திற்கு பிறகு அடுத்த படத்தை ஒப்புக்கொள்ள ஒரே தடைகல் சம்பளம்தான் என்பதை சற்று காலதாமதமாக புரிந்து கொண்டார் நகுல். அதனால்?
சம்பளத்தை ஒரேயடியாக அப்பளம் போல நொறுக்கிவிட்டார். 50 லட்சத்துக்கு ஆம் சொல்லியிருக்கிறார் ஒரு கம்பெனிக்கு. நாடோடிகள் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படத்திற்கு நகுல்தான் ஹீரோ. சம்பளம் 50 லட்சம் என்றால் அடுத்த விஷயத்தை பேசலாம் என்று தயாரிப்பாளர் சொல்ல, பவ்யமாக சரி சொல்லிவிட்டார் நகுல். இப்படத்தை வசந்த பாலன், பாபுசிவன் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றிய பிரபு என்பவர் இயக்குகிறார். |