|
முன்பெல்லாம் தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சரத்குமார், இப்போது மலையாளம், மற்றும் கன்னட படங்களிலும் அக்கறை காட்டிவருகிறார். இவரது அதீத அக்கறை, விபத்து வரைக்கும் கொண்டு போய் விட்டிருக்கிறது. சாரதி என்ற கன்னட படத்தில் நடிக்கிறார் சரத். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. காட்சிபடி அவர் குதிரையில் வேகமாக வரவேண்டும்.. குதிரையேற்றம் சரத்துக்கு புதிதல்ல. பழஸிராஜா படத்தின் பல காட்சிகளில் குதிரையில் கம்பீரமாக பயணித்தவர்தான் அவர்.
ஆனால் பழகிய குதிரைதானே என்று பாய்ந்த சரத்துக்கு பயங்கர அதிர்ச்சி. முன்னங்கால்களை தூக்கிக் கொண்டு முரண்டு பிடித்தது அது. இதில் லேசாக நிலைதடுமாறிய சரத், சில அடி தூரம் தள்ளிப் போய் விழுந்தார். எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பெலும்பில் பயங்கர அடி. வலியால் துடித்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் படக்குழுவினர். எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார்களாம் மருத்துவர்கள். இதனால் அவர் தமிழில் நடிக்கும் விடியல், மற்றும் சாரதி படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட சரத், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
|