|
அபியும் நானும் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். பல வருட சோல்ஜர் ஒரே நாளில் சாம்ராட் ஆன மாதிரி, இப்படத்தின் மூலம் அவருக்கு டைரக்டர் அந்தஸ்து கிடைத்திருக்கிறது. முதலில் இந்த படத்தை வேறொருவரை வைத்து இயக்க முடிவு செய்திருந்த பிரகாஷ்ராஜ் பின்பு தாமே இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது நல்ல விஷயம்தான். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
சாதாரணமாகவே டென்ஷன் பார்ட்டி பிரகாஷ். இப்போது டைரக்ஷன், நடிப்பு, தயாரிப்பு என்று மூன்று வேலைகளையும் ஒருவரே கவனிக்கும்போது என்னாகும்? யெஸ்... நீங்கள் நினைப்பது போலவே மண்டைக்குள் மங்காத்தா ஆட்டம் நடக்கிறதாம் அவருக்குள். டென்ஷனில் காச் மூச் என்று யூனிட்டில் கத்த ஆரம்பித்துவிட்டாராம்.
உடல்நலத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாதில்லையா? சரக்கென்று தனது நீண்ட நாள் நண்பரான டைரக்டர் ரமணாவை அழைத்து "கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா" என்றாராம். சைலண்ட் பார்ட்னர் மாதிரி, சைலண்ட் டைரக்டர் ஆகிவிட்டார் ரமணாவும். திருமலை, சுள்ளான் என்று ஆக்ஷன் படங்களை எடுத்திருந்தாலும், ரமணாவுக்குள் ஒரு டேஸ்ட்டான ஆசாமி இருப்பதால், அபியும் நானும் கதையோடு கரைந்து போவதில் அவருக்கொன்றும் சிரமம் இல்லை.
'கூழும் சிந்தல, கோப்பையும் உடையல' என்பது மாதிரி டென்ஷனும் இல்லாமல், வேலையும் கெடாமல் படத்தை இயக்கிக்(?) கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். ரமணா இருக்க பயமேன்? |