|
ஆண்டுதோறும் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த முறை அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் கல்வியாளர் திருமதி ஒய்ஜிபி என்று அழைக்கப்படுகிற திருமதி.ராஜலஷ்மி அம்மாளின் பெயரும் இருக்கிறது. வயதிலும், அறிவிலும் மூத்தவர் என்பதாலும், பாரம்பரிய கலைக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் பலருக்கும் இதில் சந்தோஷம். ஆனால் இந்த பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை யாராவது பரிந்துரைக்க வேண்டுமல்லவா? அப்படி யார் யாரை, யார் யார் பரிந்துரைத்தார்கள்? இந்த விபரத்தை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டு பெற்றிருக்கிறார் ஒருவர். இதற்கு பிறகுதான் அதிர்ச்சி.
பொதுவாக இது போன்ற விருதுகளுக்கு பரிந்துரை செய்பவர்கள் சமுதாயத்தில் நன்கு அறியப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் நபர் எந்த வகையிலும் அவருக்கு சொந்தமாகவோ, தூரத்து சொந்தமாகவோ கூட இருக்கக் கூடாது. நண்பராகவும் இருக்கக் கூடாது. விதிகள் இப்படி கிடுக்கிப்பிடி போட்டாலும், அது கடை பிடிக்கப்படுவதில்லை என்பதுதான் இந்த செய்தியின் நோக்கம்.
திருமதி ஒய்ஜிபி யை பரிந்துரைத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிதானாம். திருமதி ஒய்ஜிபி ரஜினிக்கு நெருங்கிய உறவினர் என்பது அத்தனை பேருக்கும் தெரியும். விதிகள் இப்படியிருக்க, ரஜினி செய்தது சரிதானா? |