|
இந்தியாவிலுள்ள அத்தனை மொழி படங்களின் ஆடியோ ரைட்ஸ் மற்றும் ரிங்டோன் ரைட்ஸ் வெளியிடுகிற நிறுவனம்தான் ஹங்கம்மா. மும்பையை தலைமையிடமாக கொண்டாலும் தமிழில் திங்க் மியூசிக் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சில மாதங்களாக நடிகை சினேகாவை தொடர்பு கொண்டு வருவதாக தகவல். ஏனாம்?
இவரையும் சின்னத்திரைக்கு கொண்டுவருகிற எண்ணத்தில்தான். மார்க்கெட் போனபின் வேறு வழியில்லாமல் சின்னத்திரைக்கு வருவது வேறு. மார்க்கெட் இருக்கும் போதே கம்பீரமாக சில பிரத்யேக நிகழ்ச்சிகளை நடத்துவது வேறு. சினேகா அழைக்கப்பட்டிருப்பது இந்த இரண்டாவது பிரிவில்தானாம்.
தமிழில் வெளிவரும் மிகப்பெரிய சேனலுக்காக டாக் ஷோ ஒன்றை நடத்த தீர்மானித்திருக்கிறதாம் இந்த ஹங்கம்மா. இதை நடத்தித் தர புன்னகை அரசியாக, குடும்ப விளக்காக ஒரு நடிகை அமைய வேண்டும் என்பது அந்நிறுவனத்தின் ஆசை. இதற்கெல்லாம் பொருத்தமானவராக யாரால் இருக்க முடியும்? சினேகாவேதான்! கடந்த சில மாதங்களாக நீடிக்கும் இந்த பேச்சு வார்த்தை கிட்டதட்ட முடிவுக்கு வந்திருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கத்து குருவி.
சம்பளம் படிஞ்சாதான் தகவலை வெளியே சொல்வாங்க போலிருக்கு! |