|
லயோலா காலேஜ்ல விஸ்காம் படிக்க ஆசைப்பட்டான் ஜோதி கிருஷ்ணா. ஆனால் அங்க சீட் கிடைக்கல. அப்புறம் சரத்குமார் சார்தான் தாம்பரம் கிறிஸ்ட்டியன் காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுத்தார். அப்புறம் திடீர்னு சினிமா சம்பந்தப்பட்ட கோர்ஸ் படிக்க லண்டன் போறேன்னு சொன்னான். அனுப்பி வச்சேன். இப்போ ஹீரோவாகவும் நடிக்கிறான். அவனோட வளர்ச்சியும் சினிமா மேல இருக்கிற ஆர்வமும் எனக்கே வியப்பாதான் இருக்கு என்று தனது பிள்ளையை பற்றி நெஞ்சு பூரிக்க பேசிக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
ஜோதி கிருஷ்ணா இயக்கி கதாநாயகனாக நடிக்கும் ஊலலலா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இப்படி ஒரு பூரிப்பு. 14 வயசிலேயே நட்புக்காக படத்தின் கதையை சொன்னவன் அவன் என்ற கூடுதல் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டார் ரத்னம். அப்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம், நான் ஒரு கதை வச்சுருக்கேன். கேட்கிறீங்களா என்றாராம் ஜோதி கிருஷ்ணா. சின்ன பையனாச்சே என்று சாதாரணமாக கதை கேட்க ஆரம்பித்த ரவிக்குமார் அசந்து போனதாக குறிப்பிட்டார் அதே மேடையில். இப்படியாக பலராலும் புகழப்பட்ட ஜோதி கிருஷ்ணா ஏன் த்ரிஷா, தமன்னா, ஸ்ரேயா, இலியானா என்று இந்த படத்திற்கு ஹீரோயின்களை போடவில்லை? இந்த கேள்விக்கும் அந்த மேடையிலேயே பதில் சொன்னார் ஒரு பிரபலம்.
மேற்படி ஹீரோயின்கள் அத்தனை பேரையும் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் ஜோதி கிருஷ்ணாதான். அவங்களிடம் கால்ஷீட் கேட்டிருக்கலாம். ஆனால் அவங்கள்ளாம் எங்கேயோ இருக்காங்க. அதனால் கேட்க வேணாம்னு சொன்னாரு. அவங்க எங்கேயோ இருந்தால் என்ன. இந்த படத்தின் மூலம் நீங்களும் எங்கேயோ போகப் போறீங்க என்று அவர் வாழ்த்தியது ஆர்வத்தினால் அல்ல. திரையிடப்பட்ட இரண்டு பாடல்களையும் பார்த்துதான். ஒரு விளம்பர படத்தின் நேர்த்தியும், அழகுணர்ச்சியும் இருந்தது அந்த இரண்டு பாடல்களில்.
ஒரு குக்கர் பிரியாணிக்கு ஒரு லெக் பீஸ் பதம்! |