|
டிக்காஷன் ஏற ஏற டீ கலரும் மாறும் என்பதுதான் மாறாத விதி. சினிமாவிலும் அப்படிதான். காம்பினேஷன் ஏற ஏற கலெக்ஷனும் ஏறும். அப்படி பேசப்படுகிற காம்பினேஷன்களில் ஒன்றுதான் ஜனநாதன்-ஜெயம் ரவி கூட்டு! அறிக்கி எல்சி 122 கூட்டு மாதிரி இது கொஞ்சம் விசேஷமான கூட்டுதான். எப்படி?
கோடியாக கோடியாக கொட்டியும் நல்ல பெயரையும் எடுக்காமல், நாலு காசும் பார்க்காமல் தண்டக் கம்பெனி லிஸ்ட்டில் இருந்தது ஐங்கரன். முதன் முதலாக அக்கம்பெனிக்கு நல்ல படம் எடுக்கிற நிறுவனம் என்ற பெயரை பெற்றுத் தந்ததே ஜனநாதன் இயக்கிய பேராண்மைதான். அதன்பின்பு அங்காடி தெரு, நந்தலாலா என்று தனது பெயருக்கு பெரும் கம்பீரம் சேர்த்துக் கொண்டது ஐங்கரன். (ஆங்.... களவாடிய பொழுதுகளை விட்டாச்சே) பேராண்மையால் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமோ, இல்லையோ? வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு திருப்தி. இதே காம்பினேஷன் மீண்டும் தொடர வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்களாம்.
'அழிச்சா ரப்பரு, அழுத்தி எழுதினா மார்க்கரு'ங்கிற மாதிரி எதை செய்தாலும் அதில் உச்சத்தை பார்க்கிற ஆஸ்கர் ரவிச்சந்திரன் இந்த காம்பினேஷனை அப்படியே கைப்பற்றிக் கொண்டாராம். ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க, ஜனநாதன் இயக்கும் படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறது இவரது ஆஸ்கர் பிரைவேட் லிமிடெட். இன்னொருபுறம் வேலாயுதம் படத்தையும் இதே கம்பெனிதான் தயாரிக்கிறது என்பதைதான் நீங்கள் அறிவீர்களே! |