|
மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி! இப்படத்தை திரையில் பார்க்காத பலரும் கூட டிவியில் பார்த்துவிட்டு 'அட நல்லாயிருக்கே' என்று அசந்து போனது தனி சுவாரஸ்யம். இதே டீம் மீண்டும் களம் இறங்கியிருக்கிறது. புதிய படத்தின் பெயர் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி. (நல்லா புடிக்கிறாங்கப்பா தலைப்பு) ஏதோ வைக்கணும்னு மெனக்கட்டு வச்சதில்லை இந்த தலைப்பு. சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணிக்கு ஆரம்பிக்கிற கதை, அடுத்த வாரம் சனிக்கிழமை அதே நேரத்தில் முடியுது. அதுக்காகதான் அதையே தலைப்பா வச்சிட்டோம் என்றார் படத்தின் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான எஸ்.பி.எஸ் குகன்.
இப்படத்தில் எச்டி எஸ்எல்ஆர் என்ற புதிய வகை கேமிராவை பயன்படுத்தியிருக்கிறாராம். டிஜிட்டல் வகை கேமிராவில் இது அட்வான்ஸ் மாடல் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் இக்கேமிராவை பயன்படுத்த அழைப்பு விடுத்தார். இதன் நல்லது கெட்டதுகளை அவர் சொல்ல ஆரம்பித்து முடிப்பதற்குள் சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணி ஆகிவிடுமோ என்ற பதற்றம் வந்துவிட்டது. (இவர் சொல்ல ஆரம்பித்தது வெள்ளிக்கிழமை சாயங்காலம் 5 மணி)
காதல், க்ரைம், த்ரில்லர் வகையை சேர்ந்த படம் இது என்பதை ஒரு சில காட்சிகளியே புரிய வைத்தார்கள். புதுமுகம் சரத், மற்றும் மாலினி இருவரும் கொடைக்கானல் மலைப்பகுதியில் அட்டைப்பூச்சிகளிடம் கடிபட்ட கஷ்டத்தையும் விவரித்தார்கள். அட்டை எங்கெல்லாம் கடிச்சுது தெரியுமா என்று அப்பாவியாக முகம் காட்டிய மாலினி இன்னும் நாலைந்து வருஷத்துக்கு கொடைக்கானலை மறக்கவே மாட்டார் போலிருந்தது.
திரைக்கதை எழுதிய ரதிபாலாவும், டைரக்டர் ரவி பாரதியும் ஆளுக்கொரு கேரக்டரில் நடித்தும் இருக்கிறார்களாம்.
|