|
இன்று நண்பகல் சென்னை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார் கருணாஸ். ஏதோ திருட்டு விசிடி பிரச்சனையாக இருக்கும் என்றுதான் முதலில் நினைக்க தோன்றியது. ஆனால் விஷயம் அதுவல்ல. செல்போனில் வந்த ஒரு மிரட்டலை அடுத்துதான் கமிஷனர் அலுவலகம் வரைக்கும் வந்தாராம் கருணாஸ்.
கண்டி கதிர்காமர் முருகன் கோவிலில் ஏதோ பிரார்த்தனையாம் அவருக்கு. அதுமட்டுமல்ல, இலங்கையிலும் சில உறவினர்கள் இருக்கிறார்களாம். இந்நிலையில் பிரார்த்தனையையும் முடித்துவிட்டு உறவினர்களையும் சந்திப்பதற்காக இலங்கை செல்ல முடிவெடுத்திருந்தார் கருணாஸ். சில தினங்களுக்கு முன் தனது அம்பாசமுத்திரம் அம்பானி படம் தொடர்பாக ரேடியோ ஒன்றிற்கு பேட்டியளித்தவர் இந்த தகவலை அப்போது சொல்ல, ஆரம்பித்தது வில்லங்கம்.
இலங்கைக்கு செல்லக்கூடாது. மீறி சென்றால் நடப்பதே வேறு என்று எஸ்எம்எஸ்கள் வருகிறதாம். நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக இந்த குறுந்தகவல்கள் (குறு மிரட்டல்கள்?) வருவதாக குறிப்பிட்ட கருணாஸ், நான் என்ன இலங்கைக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவா போகிறேன்? அல்லது அந்த நாட்டு அழைப்பின் பேரில் போகிறேனா? என் உறவினர்களை பார்க்க போகக் கூடாதா? என்று அடுக்கடுக்காக ஆவேசப்படுகிறார். திட்டமிட்டபடி இலங்கை செல்வேன். அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் குரல் உயர்த்துகிறார்.
அசின், விவேக் ஓபராய் பிரச்சனை வேறு. கருணாஸ் பிரச்சனை வேறு என்பதை புரிந்து கொள்ளாமல் மிரட்டல் விடுத்தால் எப்படி? நாம் தமிழர், நம்ம தமிழரையே மிரட்டுவதைதான் புரிந்து கொள்ள முடியவில்லை!
|