|
பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படத்தை லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தார். பிறகு அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டு லிங்குசாமியே படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சிம்புவும் அப்படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் மாறாக விஜய் நடிக்கப் போகிறார் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலவின.
இந்த நிலையில் சிம்பு வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை திருப்பதி பிரதர்சுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி என்னதான் அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார் சிம்பு?
"பூபதி பாண்டியன் இயக்கத்தில், லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். ஆனால் பின்னர் நிலைமை மாறியது. படத்தை தயாநிதி அழகிரியின் 'கிளவுட் நைன்' நிறுவனம் தயாரிப்பதாகவும், லிங்குசாமி இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
டெக்னிக்கலாக பார்த்தால், நான் கிளவுட் நைன் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. மேலும் அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்கவும் இல்லை. தயாநிதி அழகிரி எனது நண்பர்தான். எங்களுக்கிடையே நல்ல உறவும் உள்ளது.
லிங்குசாமி தனது படத்தின் கதையை எனக்குச் சொல்வார் என்று நான் கிட்டத்தட்ட நூறு நாட்கள் காத்திருந்தேன். ஆனால் அவர் கதையையும் சொல்லவில்லை. எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என்பதையும் சொல்லவில்லை.
கதை வரும், ஸ்கிரிப்ட் வரும் என நூறு நாட்கள் காத்திருந்தது வீணாகிப் போனது. இதையடுத்தே நான் வானம் படத்தை செய்ய முடிவெடுத்தேன். இதை தயாநிதி அழகிரி, உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியை பார்க்க தென் ஆப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்பு அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கலாம் என உறுதியாக தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் லிங்குசாமி என்னை படத்திலிருந்து நீக்கி விட்டதாக செய்திகள் வந்து அதிர்ச்சி அடைந்தேன். நூறு நாட்களாக நான் கதை கேட்க காத்திருந்த நிலையில், எனது நாட்களை வீணடித்த நிலையில் எப்படி இப்படி லிங்குசாமி அறிவித்தார் என்பது புரியவில்லை? எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்பதையும் அவர் சொல்லவில்லை. கதை என்ன என்பதையும் சொல்லவில்லை.
போடா போடி படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ந£ன் ப்ரீயாகி விடுவேன் என்பதையும் அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது அவர் என்னை நீக்கி விட்டு இன்னோரு நடிகரைப் போட்டுள்ளதாக கூறியுள்ளார். இது முற்றிலும் தொழிலுக்கு விரோதமானது. இப்படி அவர் செய்திருக்கக் கூடாது" என்று குமுறியிருக்கிறார் சிம்பு.
இந்த அறிக்கை அஸ்திரத்திற்கு லிங்குசாமி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை அறிய அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் லக்னோ சென்றிருப்பதால் அவரது சார்பாக பேசினார் அவரது தம்பி சுபாஷ் சந்திர போஸ்.
"இது குறித்து டைரக்டர்தான் பதில் சொல்லணும். இன்னும் இரண்டொரு நாளில் அவரே இது குறித்து உங்களிடம் பேசுவார்" என்றார் மிக சுருக்கமாக! காத்திருக்கிறோம்...
|