|
எடுத்துக் கொள்கிற கதைகளிலும், சொல்கிற நேர்த்தியிலும் ஒரு நேர்மையை கடைபிடிப்பவர் ஏஎம்ஆர் ரமேஷ். இவர் இயக்கிய 'குப்பி' ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை மையமாக கொண்டது. அப்படத்தின் வெற்றியும், இவரது கதை சொல்கிற பாங்கும் பல முன்னணி இயக்குனர்களையே வியக்க வைத்த விஷயம். தனது அடுத்த படைப்பாக சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை படமாக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். கடந்த எட்டு வருடங்களாக அது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். அதுமட்டுமல்ல, வீரப்பன் என்கவுன்ட்டரை வெற்றிகரமாக நடத்திய போலீஸ் அதிகாரி விஜயகுமாரை அடிக்கடி சந்தித்து இந்த கதைக்கான சம்பவங்களையும் கோர்த்துக் கொண்டிருக்கிறார் ரமேஷ்.
இதற்கிடையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரத்தை மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் பின்னணியில் காவலர் குடியிருப்பு என்ற படத்தை இயக்கி வந்தார். பெங்களுர் போலீஸ் குவார்ட்டர்சில் எதிர் எதிர் வீட்டில் வசித்த ஒரு காதல் ஜோடியையும், அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்திவிட்டு போன ஒரு இளைஞனை சுற்றியும்தான் இந்த கதை பின்னப்பட்டிருக்கிறதாம்.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் முரளி மனோகர் தானே ரிலீஸ் செய்வதாக கூறி படத்தை வாங்கிக் கொண்டார். வாங்கியதோடல்லாமல் காவலர் குடியிருப்பு என்ற தலைப்பை காதலர் குடியிருப்பு என்று மாற்றும்படியும் கேட்டுக் கொண்டாராம். ஜீன்ஸ் உள்ளிட்ட பல பிரமாண்டமான படங்களை தயாரித்தவர்தான் இந்த முரளி மனோகர். வேண்டுகோளுக்கு செவி சாய்த்ததோடு அவரது பாராட்டுகளையும் கேட்டு ஆனந்தப்படுகிறார் ரமேஷ். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பெயர் காவலர் குடியிருப்பு அல்ல, காதலர் குடியிருப்பு!
பாபர் மசூதி கலவரத்தை எடுக்கிறீர்களே, ஏதாவது சர்ச்சைகள்? என்று இழுத்தால் பளிச்சென்று பதில் வருகிறது ரமேஷிடமிருந்து. 'கருத்து சொல்ற வேலையை நான் எப்பவுமே வெச்சுக்கறதில்ல. நடந்த சம்பவத்தை அப்படியே படமாக்கிடுவேன். தீர்ப்பை மக்கள் கையிலேயே கொடுத்துடறதுதான் என் வேலை' என்றார். புரியுது...
|