|
மீடியாக்கள் செய்யும் வழக்கமான பரபரப்பினால் உலகம் முழுவதும் வாழும் டி.எம்.எஸ் ரசிகர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தரும் ஆறுதல் செய்தி இதுதான். அவருக்கு ஒரு குறையும் இல்லை. நன்றாக இருக்கிறார்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான செக்கப்புக்காக மருத்துவ மனைக்கு போயிருந்தார் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன். மைலாப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இவர் வாரம் தவறாமல் செக்கப் செய்து கொள்வாராம். இவர் போயிருந்த நாளில் முக்கியமான மருத்துவர் அங்கு இல்லாத காரணத்தால் "நீங்கள் அப்போலோவுக்கு போய் பாருங்களேன்" என்று அனுப்பி வைத்தார்களாம் அங்குள்ள ஊழியர்கள். அப்போலோவில் புற நோயாளியாக செக்கப் செய்து கொண்டு உடனே வீடு திரும்பிவிட்டார் டி.எம்.எஸ். அதற்குள் அவரது மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு என்றெல்லாம் எழுதி டி.எம்.எஸ் ரசிகர்களை அதிர வைத்துவிட்டது மீடியா.
கடந்த சில வருடங்களாக 'ஆல்பா மைண்ட் பவர்' என்ற யோகா செய்து வருகிறார் டி.எம்.எஸ். இதனால் அவர் வழக்கம் போல உற்சாகத்தோடுதான் இருக்கிறார். இந்த செய்தி வெளியானதும் முதல் போன் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் இருந்துதான் வந்ததாம். "உங்களுக்கு என்ன உதவி தேவைன்னாலும் கேளுங்க" என்று கூறிய அழகிரி, "நீங்கள் இன்னும் பல வருஷம் இருப்பீங்க" என்று தைரியமூட்டினாராம். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, பின்னணி பாடகி பி.சுசீலா ஆகியோர் நேரில் வந்து பார்த்தார்களாம்.
அவரது மனைவி, மகன் பால்ராஜ், மற்றும் விஜய்ராஜ் ஆகியோர் உடனிருந்து டி.எம்.எஸ் சை நன்றாக கவனித்து வருகிறார்கள். |