|
வடிவேலு-சிங்கமுத்து விவகாரத்தை 2009 ஆம் வருடம் மார்ச் மாதமே
முழுமையாக எழுதியிருந்தோம் நமது இணையதளத்தில். (காண்க http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/March/250309.asp) இப்போது அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய பின், "வடிவேலு வீட்ல நிறைய அள்ளிட்டாங்களாமே?" என்று ஊரெல்லாம் பேச்சு. இந்த நிலையில் திடீரென்று காவல் துறை ஆணையரை சந்தித்து சிங்கமுத்து மீது புகார் கொடுத்திருக்கிறார் வடிவேலு.
அன்று மாலையே தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியும் அளித்தார். தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி புறம்போக்கு நிலங்களை வாங்கி கொடுத்ததாகவும், பல கோடி ஏமாற்றி விட்டதாகவும் சிங்கமுத்து மீது புகார் கூறிய வடிவேலு, தனது வீட்டை சுற்றி சிங்கமுத்து ஆட்கள் தன்னை தாக்கும் நோக்கத்தில் நடமாடுவதாக கூறினார். தொலைபேசியில் தனக்கு அவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார்.
நிலத்தை பார்க்காமல் எப்படி அதை வாங்கினீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, "நிலத்தை பாருங்கண்ணேன்னு கூட்டிட்டு போவாய்ங்க. ஆனால் என்னைய காரை விட்டு இறங்கவே விட மாட்டாய்ங்க. அண்ணே. நீங்க இறங்குனா நிலத்தோட ரேட்டை ஏத்திருவாய்ங்க. அதனால் கார்லேயே இருங்கண்ணேம்பாங்க. நானும் அவங்க சொன்னதை நம்பி காருக்குள்ளேயிருந்தே நிலத்தை பார்த்திட்டு ஏகப்பட்ட பணத்தை இழந்திட்டேன். என்னைய சதி பண்ணிட்டாங்கண்ணே" என்றார்.
நீங்க இழந்ததில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு? என்ற இன்னொரு கேள்விக்கு, "அட என்னண்ணே... அசையுறது, அசையாததுன்னு. எல்லாம் சொத்துதானேண்ணே?" என்றார் தனக்கேயுரிய அசால்ட் கிண்டலுடன்.
கடைசி தகவல்- மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சிக்கியுள்ள சிங்க முத்து இன்று காலையில் இருந்தே தலைமறைவாகி விட்டார். அவரை தேடி பிடிக்க தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. |