|
தம்பிக்கோட்டை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பல மாதங்கள் கழித்து ஒருவரை பார்க்க முடிந்தது. அவர்... மிஷ்கின்! அதே கருப்பு கூலிங்கிளாஸ். அதே மிரள வைக்கும் பேச்சு. இப்படத்தின் ஹீரோ நரேன் என்பதால்தான் இந்த ஸ்பெஷல் விஜயம்.
மூடி வச்ச பெருங்காய டப்பாவை பல நாட்கள் கழித்து திறந்தால் ஒரு வாசம் வருமே, அப்படிதான் இருந்தது அவரது வெளிப்படையான பேச்சும். "நரேன் என்னோட நண்பன். உயரத்துக்கு கூட்டிட்டு போயி இங்கேர்ந்து குதிடான்னா குதிச்சுருவான். சித்திரம் பேசுதடி படத்திற்கு ஹீரோ தேடும்போது நண்பர் ஒருத்தர் சொல்லிதான் நான் நரேனை பார்த்தேன். அவன் மலையாள படம் ஒன்றில் நடிச்சு முடிச்சுருந்தான். நேரா கேரளா போய் பார்க்கிற அளவுக்கு அப்போ வசதி இல்லை. அதனால் அந்த படத்தின் திருட்டு விசிடி வாங்கிட்டு வந்து என்னோட பிளாக் அண் ஒயிட் போர்ட்டபிள் டிவியில போட்டு பார்த்தேன்".
"அந்த படத்துல க்ளீன் ஷேவ்ல இருந்தான். அதனால் நானே படத்தை 'ஃப்ரீஸ்' பண்ணிட்டு அந்த முகத்துல ஸ்கெட்ச் பேனாவை வச்சு தாடி மீசையெல்லாம் வரைஞ்சு பார்த்து செலக்ட் பண்ணினேன். நானும் அவனும் சேர்ந்து வொர்க் பண்ணிய அற்புதமான காலம் அது. ராத்திரி ஒரு மணி ரெண்டு மணிக்கெல்லாம் தண்ணியடிச்சுட்டு.... அவன் அடிக்க மாட்டான். நான்தான் அடிப்பேன். (டேய் நான் உன் பேர கெடுக்க மாட்டேண்டா என்றார் இடையில்) விடிய விடிய பேசியிருக்கோம். சினிமாவை ரொம்ப நேசிக்கிறவன் என் நண்பன். அவனுக்கு என்னோட வாழ்த்துக்கள்" என்றார்.
"முதல் பட இயக்குனர்கள் எல்லாருமே ஒரு வெறியோட வரணும். பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, இளையராஜா இவங்க ரெக்கார்டையெல்லாம் முறியடிக்கணும்ங்கிற வெறி இருக்கணும். அதே மாதிரி சுப்ரமணியபுரம், சித்திரம் பேசுதடி போன்ற படம் எடுத்த டைரக்டர்களின் முதல் பட வெற்றியை முறியடிக்கணும் என்ற ஆக்ரோஷம் இருக்கணும். நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைச்சுது என்று நாலு பாட்டு, நாலு பைட்டுன்னு எடுக்கிற மன நிலையோட புது டைரக்டர் வரக்கூடாது" என்றார் மிஷ்கின். இந்த பேச்சுக்கு ரசிகர்களின் கைதட்டல் சற்று பலமாகவே இருந்தது.
ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, ஆர்யா, பிரசன்னா, களவாணி சற்குணம், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். படத்தில் மீனா, சங்கீதா, விஜயலட்சுமி, பூனம் பாஜ்வா என்று நான்கு பெண்கள் இருந்தும் வாசனைக்கு ஒருவர் கூட மேடையில் இல்லை! "இப்படத்தின் இயக்குனர் அம்மு ரமேஷ் கே.எஸ்.ரவிக்குமாரின் இடத்தை நிச்சயம் பிடிப்பார்" என்று ஒரு விவிஐபி வாழ்த்த ரசிகர்கள் மத்தியில் அதற்கும் செமத்தியான கைதட்டல்! |