|
சாமி இயக்கியிருக்கும் படம் சிந்து சமவெளி. உயிர், மிருகம் என்று அவர் எடுத்த முன் இரு படங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படங்கள் என்பதை ரசிகர்கள் அறிவர். இதோ, அவரது மூன்றாவது படமும் பெரும் பிரச்சனையை கிளப்ப வந்து கொண்டேயிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த படம் பற்றி இந்து மக்கள் கட்சியின் தலைவர் கண்ணன் என்பவர் நக்கீரன் இதழில் அங்கலாய்த்திருந்தார். என்னவென்று? மாமனாருக்கும் மருமகளுக்கும் இருக்கிற கள்ளத்தொடர்பை சொல்லப் போகிற படம் இது. அதனால் இதை சென்சார் அனுமதிக்கக் கூடாது என்று!
நேற்றைய தினம் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கிவிட்டது தணிக்கை துறை. ஏ முத்திரை வழங்கப்பட்டாலும், இப்படத்தை பார்த்த சென்சார் உறுப்பினர்களின் கருத்து என்னவாம்? பெரும் மூதாட்டி ஒருவரும் வந்திருந்தாராம் படத்தை பார்க்க. இந்த காலத்தில் எங்கு திரும்பினாலும் கள்ளக்காதல் கொலைகள்தான் திரும்ப திரும்ப நிகழ்கிறது. இந்த நேரத்தில் வந்திருக்கும் இந்தப்படம் துணிச்சலான முயற்சி. டைரக்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பதுதான் அந்த மூதாட்டி மற்றும் பல உறுப்பினர்களின் கருத்தாக இருந்ததாம்.
இந்த படத்தை அனுமதிப்பார்களா என்று மனசுக்குள் பெரும் பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்த டைரக்டர் சாமிக்கு அவர்கள் கொடுத்த ஒன்றிரண்டு கட்டுகள் பெரும் பிரச்சனையாக தெரியவில்லை. அதற்கு கண்ணை மூடிக் கொண்டு சம்மதித்துவிட்டாராம். இன்னும் இரண்டொரு தினங்களில் படம் ரிலீஸ். பிரளயத்திற்கு தயாரா ரசிகர்களே...
|