"வடிவேலுவோட பதினைஞ்சு வருஷமா கூடவே இருந்ததுக்கு அவரு கொடுத்த பரிசு இதுதானா? நியாயத்தை நீங்களே சொல்லுங்க தம்பி" என்று அழாத குறையாக பேச ஆரம்பித்தார் சிங்கமுத்து. வேறொன்றுமில்லை, சென்னையில் வாங்கிப் போட்ட நிலங்கள் தொடர்பான பிரச்சனையில், சிங்கமுத்துவின் கை 'விளையாடி' விட்டதாக சந்தேகப்படுகிறாராம் வடிவேலு. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இந்த நகைச்சுவை கூட்டணிக்குள் ஒரே அழுகாச்சி சப்தம்! என்ன நடந்தது? நம்மிடம் விலாவாரியாக பேச ஆரம்பித்தார் சிங்கமுத்து.
"வடிவேலுவோட மேனேஜரா இருந்த முருகேசனும் வேலுச்சாமியும் இறந்திட்டாங்க. வேலுச்சாமி இறந்ததும் சந்தேகப்பட்ட வடிவேலு தன்கிட்ட இருந்த நில பத்திரங்களையெல்லாம் செக் பண்ண ஆரம்பிச்சாரு. இவருக்கு நிலம் வாங்கி கொடுத்ததெல்லாம் தாம்பரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திங்கிறவருதான். நான் கூட மாட போவேன். நிலத்துக்கு வில்லங்கம் இருக்கான்னு பார்ப்பேன். ஒரு சதவீதம் கமிஷன் கொடுப்பாங்க. அதை பத்து பேரு பிரிச்சிப்போம்"
"இவரு வாங்கின நிலத்தை பற்றி சந்தேகப்பட்டாருன்னு தெரிஞ்சதும், நானே நிலம் வாங்குன அத்தனை பேரையும் கொண்டாந்து அவருக்கு முன்னாடி நிறுத்திட்டேன். மூணு கோடிக்கு அவரு வாங்கின நிலம் இன்னிக்கு பல கோடி போவுது. நிலத்து பேருல வடிவேலுவுக்கு சந்தேகம் இருந்தா திருப்பி கொடுத்திரச் சொல்லுங்க. நாங்களே எடுத்துக்கிறோம்னும் அவங்க சொல்றாங்க. அப்படியிருந்தும், இந்த நில விவகாரத்திலே நான் கையாடல் பண்ணிட்டதா அவரு ஊரு முழுக்க சொல்லிட்டு திரியுறாரு என்றார் ஆவேசமாக! என் மேல தப்பு இருந்தா கோர்ட்ல வழக்கு தொடர வேண்டியதுதானே, எதுக்கு இப்படி சொல்லிட்டு திரியணும்?" என்று ஆவேசப்பட்டவரிடம், "நெருப்பில்லாம புகையுமா?" என்று கேட்டதற்கு இன்னும் ஆவேசமானார்.
"அவருக்கு இந்த நில விவகாரத்திலே உண்மை என்னன்னு தெரியும்ங்க. என்னை அவரு சந்தேகப்படவே மாட்டாரு. அவரு கோவமெல்லாம் நான் என் புள்ளைய ஹீரோவாக நடிக்க வைக்கிறதுதான். கடைசி வரைக்கும் இவரு கூடவே குப்பை கொட்டிகிட்டு இருக்கணும்னு நினைக்கிறாரு. என் புள்ளை வளர்ந்தா நானும் வளர்ந்திருவேனோங்கிற பயத்திலே இப்படி புரளியை கிளப்புறாரு. அதுமட்டுமில்லே, அவரு பையன் சுப்ரமணிய ஹீரோவாக்கணும்னு ஆசைப்படுறாரு. அது சரியா அமைய மாட்டேங்குது. இன்னொரு விஷயம், ஆரம்பத்திலிருந்தே அவருக்கு முக்குலத்தோர்களை பிடிக்காது. (பார்றா...) நான் தெரியாத்தனமா அந்த சாதியிலே பொறந்துட்டேன். என்ன செய்யுறது என்றார்!
"பதினைந்து வருசமா அவரு என்னென்ன குற்றங்கள் செஞ்சாருன்னு எனக்கு தெரியும். பழகிட்டு சொல்ல வேணாம்னு பார்க்கிறேன். நான் பேச ஆரம்பிச்சா நிறைய விஷயங்கள் வெளியிலே வரும். அவரு நாறிப்போயிடுவாரு" என்றவர், "மகாத்மா காந்தியே இவரு ஆபிசுக்குள்ளே போயிட்டு வந்தாலும், காந்தியோட கைத்தடி எங்க ஆபிஸ்லே திருடுனதுதான்னு சொல்லுவாரு. இது வடிவேலு கூடவே பிறந்த சந்தேக குணம்" என்றார் சகட்டுமேனிக்கு.
"விஜயகாந்தோட தகராறு, ஜெயமணியோட தகராறு, போண்டாமணியோட தகராறு, நம்பிராஜனோட தகராறு, சிவநாராயணனோட தகராறு, கடைசியா கேள்விப்பட்டேன், ஜே.கே.ரித்திஷோடவும் தகராறாம்"
"அவரு நல்லவரா இருந்தா, இத்தனை காலம் அவருக்கு காமெடி டிராக் எழுதிக் கொடுத்திட்டு இருந்த கருப்பையா, எஸ்பி.ராஜகுமார், கிருஷ்ணன், கடைசியா நான் எல்லாரும் இப்போதும் இருந்திருப்போமே? ஒருத்தருமே அவரோட இருக்க முடியாது. செத்துப்போன வேலுச்சாமிக்கும் அவருக்கும் கடந்த ஒரு வருஷமாகவே கடுமையான சண்டை நடந்திட்டு இருந்திச்சு. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட, வேலுச்சாமியோட மனைவி வடிவேலு மேல போலீஸ்லே கம்ப்ளைண்ட் கொடுக்க போறதா சொல்லிச்சு. நான்தான், வேணாம்மா... பொறுமையா இருங்கன்னு சொல்லியிருக்கேன் என்று பெரிய குண்டை போட்டு விட்டு ஓய்ந்தார்.
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி- தமிழக அரசியல் வார இதழ் |