த்ரிஷாவின் ரசிகைகள் இப்போதே கர்சீப் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. பீமா படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அவரது ரசிகைகள், இனிமேல் நீங்கள் இறந்து போவது போல் நடித்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவருக்கு கடிதம் அனுப்பினார்களாம். த்ரிஷாவின் அம்மா உமாவும், இது குறித்து கவலைப்பட்டார். 'அந்த காட்சியை பார்க்கும் போது எனது கண்கள் குளமாகிவிட்டது. என்னதான் நடிப்பு என்றாலும் இப்படி ஒரு காட்சி அவசியம்தானா என்று அப்போது யோசித்தேன். இனிமேல் அப்படி நடிக்க வேண்டாம் என்று த்ரிஷாவிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டேன்' என்றார்.
ஆனால் எப்போதும் நினைப்பது ஒன்று. நடப்பது இன்னொன்றாக தானே இருக்கிறது? சர்வம் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் த்ரிஷா இறந்துவிடுவது போல படம் பிடித்திருக்கிறார்களாம். இந்த விஷயம் ரசிகர் மன்ற கண்மணிகளுக்கு தெரியுமா அல்லது தெரியாதா, தெரியவில்லை. த்ரிஷாவின் அம்மா உமாவிற்கு தெரியுமாம். ஆனால் வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்துவிட்டாராம்.
இந்த மேட்டருக்கு சம்பந்தமில்லாத இன்னொரு விஷயம். அபியும் நானும் விழாவுக்கு சுரிதாரில் வந்திருந்தார் த்ரிஷா. வழக்கமாக மினி ஸ்கர்டில் வரும் அவர், முதல்வர் விழா என்பதால் இப்படி நாகரிகமாக வந்திருப்பார் போலிருக்கிறது. தொடரட்டும் இந்த பழக்கம்!
-ஆர்.எஸ் |