எழுத்தாளர் சாரு நிவேதிதாவும், இயக்குனர் கே.ராஜேஷ்வரும் நண்பர்கள். இவர் இயக்கி வரும் 'இந்திரவிழா' படத்தில் நடித்து வருகிறார் நமீதா. திடீரென்று ஒருநாள் சாருவை அழைத்த ராஜேஷ்வர், 'இன்னிக்கு நமீதா ஷ§ட்டிங்கில் இருக்காங்க. உடனே வாங்க' என்று அழைப்பு விடுத்தாராம் நண்பருக்கு.
நமீதாவை பார்க்கிற ஆசையில் அலறி அடித்துக் கொண்டு ஓடிய சாரு, கையோடு தான் எழுதிய ஜீரோ டிகிரி நாவலின் ஆங்கில பதிப்பையும் எடுத்துக் கொண்டு ஓடியிருக்கிறார். தனது எழுத்தாள நண்பரை நமீதாவுக்கு அறிமுகப்படுத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார் ராஜேஷ்வர். அவ்வளவுதான், தனது ஆங்கில அறிவையும், இலக்கிய தாகத்தையும் நமீதாவிடம் சொல்லி அசத்த நினைத்தார் சாரு. அங்குதான் நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்தது.
சாருவின் இலக்கிய ஆர்வத்துக்கு சற்றும் குறையாமல், ஆங்கில இலக்கியங்கள் பற்றி பேச ஆரம்பித்தார் நமீதா. வேடிக்கை என்னவென்றால், சாருவின் ஜீரோ டிகிரி நாவலையும் முன்பே படித்திருக்கிறாராம் நமீ. மேற்படி நாவலை படிக்காதவர்களுக்கு ஒரு சின்ன தகவல்... தமிழில் முன்பு வெளிவந்த சரோஜாதேவி டைப் புத்தகங்களுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இந்த ஜீரோ டிகிரி.
வந்த வேகத்தில் நமீதாவின் 'பிரமாண்டம்' குறித்து தனது வலைதளத்தில் விரிவாக எழுதியிருந்தார் சாரு. இவரின் அங்க வர்ணிப்புகள் எப்படி நமீதாவின் பார்வைக்கு போனதோ? அறிமுகப்படுத்திய ராஜேஷ்வருக்கு விழுந்ததாம் ராக ஆலாபனை! அதன்பின் ராஜேஷ்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவசரம் அவசரமாக தனது வலை தளத்திலிருந்து நமீதாவின் வர்ணனையை எடுத்துவிட்டார் சாரு. இலக்கிய மோதல், இலக்கிய மோதல்கிறாங்களே... அது இதுதானா?
-ஆர்.எஸ்.அந்தணன் |