தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்' நாவலை 'பூ' என்ற பெயரில் படமாக்கி வருகிறார் சசி. ரோஜாக்கூட்டம் படத்திற்கு பின், சசியும், ஸ்ரீகாந்தும் இணையும் படம் இது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் காம்ப்ளக்சில் நடந்தது. இதுவரை ஒரு வெற்றிப்படங்களையும் இயக்காத எஸ்.எஸ்.ஸ்டான்லி என்பவரையும் சேர்த்து மேடையில் மொத்தம் 14 இயக்குனர்கள் இருந்தார்கள். தமிழ்ச்செல்வன் ஆடியோவை வெளியிட, இயக்குனர் வஸந்த் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக திரையிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. புது இசையமைப்பாளரான எஸ்.எஸ்.குமரனுக்கு அந்த மேடையிலேயே நிறைய பாராட்டுகள். இவர் மத்திய அரசு ஊழியர் என்பது கூடுதல் தகவல்! விழாவில் பேசிய பாலுமகேந்திரா, 'நான் கதை நேரம் என்ற தொலைக்காட்சி தொடரை இயக்கிக் கொண்டிருந்தபோது, தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்' நாவலையும் படமாக்க விரும்பினேன். இதற்காக அவரை தொடர்பு கொண்டபோது, சசி இந்த கதையின் உரிமையை வாங்கியிருப்பதாக கூறினார். இப்போது இருக்கிற இயக்குனர்கள் யாரும் படிப்பதில் அக்கறை காட்டுவதில்லை. டி.வி.டி யை தான் அதிகமாக பார்க்கிறார்கள்' என்றார்.
'எங்களை வளைத்து வளைத்து படம் எடுக்கிறார்கள். ஆனால், பத்திரிகைகளை புரட்டினால் எங்கள் படங்கள் வருவதேயில்லை. நடிகர், நடிகைகள் படங்கள்தான் வருகின்றன' என்று லேசாக பத்திரிகைகளுக்கும் ஒரு குட்டு வைத்தார் இயக்குனர் அமீர்.
'முதலில் கதை, பிறகு படத்தின் நாயகி பார்வதி. கடைசியில்தான் நான். இப்படம் என்னை விட பார்வதிக்குதான் அதிகம் பேர் வாங்கிக் கொடுக்கும். அது தெரிந்திருந்தும் நான் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றால், வெற்றி படங்களில் நான் இருக்க வேண்டும் என்பதால்தான்' வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார் ஸ்ரீகாந்த்.
வாரம் ஒரு ஆடியோ ரிலீஸ் வைக்கும் 'மோசர் பியர்' நிறுவனம், இப்படங்களை எல்லாம் எப்போதுதான் ரிலீஸ் செய்யுமோ?
-ஆர்.எஸ்.அந்தணன் |