சிம்பு விஷயத்தில் தேடி வந்து அன்பு செலுத்துகிறது வம்பு. சில தினங்களுக்கு முன் சென்னையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றிற்கு தனது தம்பி குறளரசனுடன் சென்றார் சிம்பு. காரை ஓட்டி வந்த டிரைவர், நள்ளிரவு 12 மணியை தாண்டியும் இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வராததால், உஷா ராஜேந்தருக்கு போன் செய்து புலம்பினாராம். அவரும், 'அவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சு. நீ வண்டியை எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்திடு' என்று சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து காரை சிம்புவின் வீட்டில் பார்க் செய்துவிட்டு தனது வீட்டுக்கு போய்விட்டாராம் டிரைவர்.
ஓட்டலை விட்டு வெளியே வந்த அபூர்வ சகோதரர்கள் இருவரும், காரை காணாமல் திகைத்திருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் வண்டியோடு டிரைவர் எஸ்கேப் ஆகிவிட்டதாக போலீசில் புகார் அளிக்க, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விடிய விடிய காரையும், டிரைவரையும் தேடியிருக்கிறார்கள். இதற்கிடையில் நண்பனின் கார் மூலம் வீடு போய் சேர்ந்தார்கள் இருவரும்.
கார் வீட்டில் இருப்பதையும், நடந்த விஷயத்தையும் அறிந்து கொண்ட சிம்பு, போலீசுக்கு போன் செய்து கார் கிடைத்துவிட்ட தகவலை தெரிவித்தாராம். யாருக்கும் தெரியாமல் செய்கிற விஷயமே பத்திரிகைகளில் வந்துவிடுகிறது. போலீஸ் புகார் வரைக்கும் போனால் விஷயம் வெளியே தெரியாமல் இருக்குமா? மறுநாள் மாலை நாளிதழ்களில் கொட்டை எழுத்தில் செய்தி வர, கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தாராம் ராஜேந்தர். உடனடியாக மேற்படி சம்பவத்திற்கு மறுப்பும் தெரிவித்திருக்கிறார்.
'சிம்பு ஊரிலேயே இல்லை. வெளிநாட்டில் இருக்கிறார். விருந்துக்கு போனது குறளரசன்தான். கார் இன்னும் வந்து சேரவில்லை. போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது' இவ்வாறு தனது மறுப்பில் தெரிவித்திருக்கிறார் விஜய டி.ராஜேந்தர்.
-ஆர்.எஸ். |