பிசினஸ் என்பது முயல்-ஆமை ஓட்டம் மாதிரி. சற்று கண் அயர்ந்தாலும், ஆமைகளுக்கு கொண்டாட்டம்தான். இந்த பந்தயத்தில் கால் நூற்றாண்டு காலமாக முதலிடத்திலேயே இருப்பது சிலருக்கு மட்டுமே கை வந்த கலை. அவர்களில் ஒருவர் லேகா ரத்னகுமார். நூற்றுக்கணக்கான விளம்பர படங்கள், லட்சக்கணக்கான பயனீட்டாளர்கள் என்று லேகாவின் எல்லை வரையறுக்க இயலாதது. ஹாலிவுட் படங்கள் வரை இவரால் உருவாக்கப்பட்ட 'லேகா-சோனாட்டோன்' இசை பிரசித்தமானது. இதயம் நல்லெண்ணெய் விளம்பர படங்கள் லேகா ரத்னகுமாரின் திறமைக்கு ஒரே ஒரு சாம்பிள். (ஜோதிகா நல்லெண்ணையும், சினேகா அப்பளத்தையும் மறக்க முடியுமா?)
'முப்பது நாளில் முன்னேறுவது எப்படி?' என்று கட்டுரை எழுதுகிற புண்ணியவான்கள் லேகா ரத்னகுமாரிடம் சில நிமிடங்கள் பேசினால் போதும், பத்து புத்தகங்கள் ரெடி! ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளான செப்டம்பர் 25-ம் தேதியன்று ஜெர்மனியில் இருப்பது இவரது சென்ட்டிமென்ட். இருபத்தைந்து வருடங்களுக்கு முன், இவரது பிறந்த நாள் 80 சதுர அடி மட்டுமே உள்ள வாடகை அலுவலகத்தில் கொண்டாடப் பட்டதை இன்னும் மறக்காதது ரத்னகுமாரின் ப்ளஸ். இப்படி ஒரு அசுர வளர்ச்சி எப்படி?
உழைப்பு...! லேகாஸ் டேஸ்ட் இட்லி பொடியை குடும்பமே உட்கார்ந்து பொட்டலங்களில் அடைத்து ஸ்கூட்டரில் கொண்டு போய் கடை கடையாக விற்பார்களாம். வேடிக்கை என்னவென்றால் போகிற இடங்களில் எல்லாம் வண்டியை நிறுத்தி இந்த இட்லி பொடி விளம்பர போஸ்டர்களை சுவற்றில் ஒட்டிக் கொண்டே போவார்களாம் இவரும், குடும்பத்தினரும்! இத்தனைக்கும் செல்வந்தரின் வாரிசுதான் இவர். அப்பா கே.பி.ஜி.நாகரத்தினம் விருதுநகரில் பெரிய அச்சக அதிபர். பிரஸ் அப்பா கண்ட்ரோலில் இருந்தாலும், அச்சு பிசகாமல் வேலை செய்வதில் பிள்ளை சமர்த்தர். பிரிண்டிங் தொடர்பாக அப்பாவுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பியவர், அதன்பின் தொழிலதிபர் ஆனபின்தான் சொந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாராம். இடையில் நடந்ததெல்லாம் இரத்த கண்ணீர் சமாச்சாரங்கள்.
நிஜமாகவே கடல் போல வீடு. அதுவும் பாண்டிச்சேரி கடலோரத்தில். சென்னையில் பிரமாண்ட அலுவலகம், பங்களா என்று வளர்ச்சியடைந்திருந்தாலும், விருதுநகரில் இருந்து புறப்படும்போது தனக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து சென்னைக்கு ரயிலேற்றி வைத்த நண்பனை இப்போதும் மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் தன்னை ரயிலில் ஏற்றி அனுப்பிய அதே நாளில் அவரை சென்னைக்கு அழைத்து மரியாதை செய்து வருகிறார்.
சின்னத்திரை வரலாற்றில் முதன் முதலில் அதிக பட்ஜெட்டில் தொடரை தயாரித்து இயக்கியதும் இவர்தான். ராஜேஷ்குமார் எழுதிய 'இருட்டில் ஒரு வானம்பாடி' தொடர் முழுவதும் ஊட்டியில் எடுக்கப்பட்டது. இதை தயாரித்து இயக்கியது லேகா ரத்னகுமார். 88 களில் தூர்தர்ஷன், அதிக பொருட் செலவாக பெஞ்ச், சேர்களை வைத்தே தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பி வந்த காலம் அது. பல்வேறு விளம்பர படங்களை இயக்கி வந்தாலும், முழுமையான திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது ரத்னகுமாரின் கனவு. முறையாக ஹாலிவுட் வரை சென்று டைரக்ஷனும் படித்திருப்பதால், இவரது உள்ளங்கையில் இருக்கிறது நல்ல சினிமா. அதற்கு எப்போது முழுவடிவம் கொடுப்பாராம்?
சித்ரலேகா கதை எழுத, தயாரித்து இயக்கப் போகிறார் லேகா ரத்னகுமார். விடிவெள்ளி விருதுநகரிலிருந்து முளைத்தால், வேண்டாம் என்றா சொல்லப் போகிறது கோலிவுட்?
-ஆர்.எஸ். |