சர்ச்சை குயினாகிவிட்டார் சங்கீதா! 'உயிர்' படத்தை அடுத்து சங்கீதா நடித்த 'தனம்' படத்திற்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இப்படத்தில் தாசிப் பெண்ணாக நடித்திருக்கிறார் சங்கீதா. பிரச்சனை அதுவல்ல இப்போது. இவர் பிராமண பையன் ஒருவரை திருமணம் செய்து கொள்வதும், இந்த பிராமண குடும்பம் பணம் என்றால் ஆ வென்று வாய் பிளப்பதாக காட்டியிருப்பதுதான் இந்த எதிர்ப்புக்கு காரணம்.
படத்தின் இயக்குனர் சிவாவுக்கு தினம் தினம், தனம் தொடர்பான மிரட்டல்கள் வருகிறதாம். 'இதையெல்லாம் போலீசில் சொல்லி பிரச்சனையை பெரிசு படுத்த விரும்பவில்லை' என்கிறார் சிவா. 'மூட நம்பிக்கைகள் ஒரு குடும்பதை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதைதான் சொல்லியிருக்கிறேனே தவிர, எந்த ஜாதியையும் இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை' என்கிறார் இந்த புது இயக்குனர்.
'நான் தொழிற்சங்கத்தில் முக்கிய பதவியில் இருந்தவன். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நானில்லை' என்கிறார். இனப்பிரச்சனை அளவுக்கு போய்விட்டது இந்த தன(ம்)பிரச்சனை!
சங்கீதாவுக்கு என்ன சந்தோஷம் என்றால், இவரை பார்க்கிறவர்கள் 'துணிச்சலாக நடிச்சிருக்கீங்களே, எப்படி?' என்கிறார்களாம். துணியில்லாமல் நடிக்க சொன்னால் கூட துணிச்சலாக நடிக்கிற நடிகைகளுக்கு மத்தியில், சங்கீதாவின் கதை துணிச்சலுக்கு இத்தனை வரவேற்பா!
-பிரகஸ்பதி |