தமிழ்சினிமாவின் முக்கியமான நடிகர் அவர். இவரது மகளுக்கு திருமணம் நடைபெறும்போது முதல்வராக இருந்தார் ஜெயலலிதா. அவரை நேரில் சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வைத்தவர், தி.மு.க தலைவர் கலைஞரை கண்டு கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் நடிகரை நன்கு அறிந்தவர் கலைஞர். பின்பு அரசியல் மாற்றம் ஏற்பட்டு முதல்வரானார் கலைஞர். இப்போது மகனின் திருமணம் வந்தது. இந்த முறை குடும்பத்தோடு சென்று கலைஞரை திருமணத்திற்கு அழைத்தார் நடிகர். அழைப்பிதழை வாங்கிக் கொண்ட கலைஞர், என்னய்யா... உனக்கு ஒரு பெண் இருந்தாரே, திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, தடுமாறிப் போனார் நடிகர்.
அவரை அழைத்தால் இவர் கோபித்துக் கொள்வாரோ? இவரை அழைத்தால் அவர் என்ன நினைப்பாரோ? என்று, ஆட்சியில் இருப்பவருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுத்த பல சினிமாக்காரர்கள் உண்டு. சரி, விஷயத்திற்கு வருவோம். இதுபோன்ற சிக்கல்கள் எதற்கும் இடம் கொடுக்காமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து தனது மகன் சிபிராஜ் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் புரட்சித்தமிழன் சத்யராஜ்.
கடந்த சில தினங்களுக்கு முன் போயஸ் கார்டன் வட்டாரத்திடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தாராம் சத்யராஜ். உடனடியாக வரச்சொல்லி அழைப்பு வந்தது முன்னாள் முதல்வரிடமிருந்து. குடும்பத்தோடு போயிருந்தவர், அழைப்பிதழை கொடுத்துவிட்டு நீண்ட நேரம் அவரிடம் பேசிவிட்டு திரும்பியிருக்கிறார். அதே போயஸ் கார்டனில்தான் ரஜினியின் வீடும். புரட்சித்தமிழனின் கால்கள் அந்தப் பக்கமும் போனதா என்பதுதான் தெரியவில்லை.
-ஆர்.எஸ். |