அண்ணாமலை, மலைக்கோட்டை, மருதமலை என்று 'மலை' சம்பந்தப்பட்ட தலைப்புக்கும் வெற்றிக்கும் ரொம்பவே நெருக்கம்! இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்ட அருண் விஜய், தான் நடிக்கும் புதிய படத்திற்கு 'மலை மலை' என்று பெயர் வைத்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், ஒவ்வொரு முறையும் வெற்றி மயிரிழையில் கை நழுவிப் போவது பற்றி கவலைப்பட்டார். இந்த முறை பெரும் பொருட் செலவில் ஒரு படத்தை தயாரிக்க தனது மாமனாரே முன் வந்திருப்பதாக தெரிவித்தார். முதன் முறையாக இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் என்றெல்லாம் அறிவித்த அருண், படத்தின் தலைப்பு, இயக்குனர், ஹீரோயின் பற்றிய விபரங்களை விரைவில் அறிவிப்பதாக கூறினார்.
இதோ, சொன்னபடி அறிவித்தும் இருக்கிறார். இந்த படத்தை கமர்ஷியல் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். அருண் விஜயுடன் ஜோடி சேரப்போகிறவர் பூஜா. நான் கடவுள் படத்திற்கு பிறகு புதிய படங்களை எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் பூஜா. நான் கடவுள் வந்தபின் எனது கேரக்டர் பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரிக்கும். அதை நிறைவு செய்யும் விதத்தில்தான் எனது அடுத்த படமும் இருக்க வேண்டும் என்ற பூஜா, இப்படத்தின் கதையை கேட்டதும் பூரித்துப் போய் ஒப்புக் கொண்டாராம்.
இந்த முறை ஜெயிக்காம விடறதில்லை என்ற முடிவோடு இறங்கியிருக்கேன். கொஞ்சம் கவனிச்சுக்கங்க பாஸ் என்கிறார் அருண் விஜய். 'எஸ் பாஸ்...'
-ஆர்.எஸ். |