நாயகன் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுத்திருக்கும் ஜே.கே.ரித்தீஷ், கோடம்பாக்கத்து 'குவார்ட்டர்' கோவிந்தன்களுக்கு மட்டுமல்ல, நலிந்த சினிமா கலைஞர்களுக்கும் நம்பிக்கை நாயகனாகவே இருக்கிறார். இந்த அதிரடி பார்ட்டியின் அதிரி புதிரி அமர்க்களங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டாலும், சமீபத்தில் இவர் செய்த ஒரு விஷயம், 'வெல்டன் சாரே...' என்று வாழ்த்த வைக்கிறது.
காரைக்கால் பகுதியில் மனநிலை சரியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் தியாகராஜன் என்பவர், தமிழ் சினிமாவில் ஐம்பது படங்களுக்கு மேலாக இணை இயக்குனராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல, கலைஞர், பாலசந்தர் கைகளால் விருதுகள் வாங்கியவர். 'மாருதி' என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த பதினைந்து வருடங்களாக இப்படிதான் வாழ்ந்து வருகிறாராம்.
இவரது மனைவி ஷீலாதேவி கூலி வேலைக்கு போகிறார். அதில் கிடைக்கும் வருமானம்தான் இருவருக்கும் சாப்பாடு மற்றும் மருத்துவ தேவைக்கு. இதையெல்லாம் ஒரு பத்திரிகையில் பார்த்த ரித்தீஷ், உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். தேவைப்பட்டால் மேலும் தருவதாகவும் எப்படியாவது அவரை குணப்படுத்துங்கள் என்றும் ஆறுதல் கூறியிருக்கிறார்.
சம்பாதிக்கிற பணத்தை எதிர்கால வைப்புத் தொகையாக வைக்கும் நடிகர்களுக்கு மத்தியில், இது போன்ற புண்ணியங்களை எதிர்கால வைப்பு தொகையாக வைக்கும் ரித்தீஷூக்கு ஒரு 'ஜே...' போடுவோமா?
-ஆர்.எஸ்.அந்தணன் |