தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை சொல்லும் படம் அபியும் நானும். பிரகாஷ்ராஜின் நீண்டகால தயாரிப்பு இது. ச்செல்லோம்ம்ம்.. என்று அடிக்கடி பிரகாஷ்ராஜை அடிக்கடி சந்தோஷப்பட வைக்கும் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் த்ரிஷா ஒரு பாட்டு கூட பாடியிருக்கிறாராம். இதில் பிரகாஷ்ராஜும், த்ரிஷாவும் அப்பாவும், மகளுமாக நடித்திருக்கிறார்கள்.
இளம் ஹீரோக்கள், அதிலும் குறிப்பாக டாப் ஒன் ஹீரோக்கள் அழைத்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கும் த்ரிஷா, இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தனது நடிப்புக்கு தீனி போட கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பு என்பதால்தான். (மற்ற படங்களில்தான் தெரிகிறதே, எதற்காக இவரை புக் பண்ணுகிறார்கள் என்று) மொழி படத்தை பார்த்துவிட்டு அதே பிரிமியர் ஷோவில் இதே மாதிரி ஒரு கதையை எனக்கும் சொன்னால், உடனே கால்ஷீட் ரெடி என்று ராதாமோகனிடம் காதை கடித்தார் த்ரிஷா. அவர் சொல்லி சில நாட்களுக்குள் இந்த கதையை சின்ன மாமிக்கு சொல்லி அசத்தினார் ராதாமோகன். இப்படியெல்லாம் சிலாகிக்கப்பட்ட அபியும் நானும், ஆடியோ ரிலீசுக்கு தயாராகிவிட்டது. சரி, விஷயத்திற்கு வருவோம்.
கடந்த வாரம் முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்தார் பிரகாஷ்ராஜ். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று முதலில் அறிவிக்கப்பட்டாலும், இவர் போனது வேறு விஷயத்திற்காக. தனது தயாரிப்பில் உருவான அபியும் நானும் படம் எப்படி தந்தை-மகள் பாசத்தை அடிப்படையாக கொண்டதோ? அதைப்போலவே தந்தை மகள் பாசத்திற்கு உதாரணமாக விளங்கும் முதல்வர் கலைஞரும், அவரது மகள் கனிமொழியும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சிறப்பித்து தர வேண்டும் என்பதற்காகதான் இந்த சந்திப்பு நடந்ததாம். விழாவுக்கு தனது மகள் கனிமொழியுடன் வந்து கேசட்டை ரிலீஸ் செய்யவும் சம்மதித்திருக்கிறாராம் முதல்வர்.
-ஆர்.எஸ்.அந்தணன் |