இடையில் எத்தனையோ படங்கள் வந்தாலும் ஸ்டடியாக போய் கொண்டிருக்கிறது சுப்ரமணியபுரம். அப்படத்தின் ஹீரோ ஜெய் வீட்டிலும் நிறைய கூட்டம். ஒருபக்கம் ரசிகர்கள். மறுபக்கம் தயாரிப்பாளர்கள்! இப்போதே கைவசம் ஆறு படங்கள் வைத்திருக்கிறாராம்.
நடிக்க வந்த புதிதில் விஜய் மாதிரியே இருப்பதாக பேசப்பட்டதாலும், விஜயின் தீவிர ரசிகராக இருந்ததாலும், அவரைப் போலவே நடிக்கவும் செய்தார் ஜெய். சென்னை 28-ல் நடிக்கும் போது 'உங்க பாணியில் நடிங்க. யாரையும் காப்பி அடிக்க வேண்டாம்' என்று வெங்கட்பிரபு அட்வைசித்தன் பேரில் தன்னை மாற்றிக் கொண்டவர், சுப்ரமணியபுரம் படத்தில் தனக்கென்று தனி ரூட்டை பிடித்து விட்டார். படமும் ஹிட் ஆனதால் ஜெய்யின் வீடு இருக்கும் ஏரியாவே திருவிழா கோலமாக இருக்கிறது.
'ஒரு நடிகனின் வெற்றி வாயை திறந்து சம்பளம் கேட்பதில் இல்லை. தயாரிப்பாளர்கள் தானாக அள்ளிக் கொடுப்பதில்தான் இருக்கிறது' என்பார்கள் கோடம்பாக்கத்து ஷேக்ஸ்பியர்கள். அதை நிரூபிக்கும் விதமாக, கொஞ்சம் கொஞ்சமாக மேலேற துவங்கிய ஜெய்யின் கிராஃப், இன்றைய தேதியில் அரை கோடியை தாண்டியே விட்டது. இத்தனைக்கும் எனக்கு சம்பளம் இவ்வளவு கொடுங்கள் என்று அவர் வாய் திறந்து கேட்டதே இல்லை. இது தானாக ஏறிய கிராஃப் என்கிறார்கள்.
இத்தனைக்குப் பிறகும் பஞ்ச் டயலாக்கிற்கோ, பட்ட பெயருக்கோ ஆசைப்படவில்லை குழந்தை என்பதுதான் விசேஷம்!
-'ஜால்ரா' கோவிந்து |