'எ கம்ப்ளீட் ஃபுட்' என்பார்கள். அதைப்போல தமிழ்சினிமாவின் 'கம்ப்ளீட் முகவரி புக்' வெரைட்டி சினிமா! எழுதிய ஈரம் காய்வதற்குள்ளாகவே அட்ரசை மாற்றிவிடும் சினிமாக்காரர்களுக்கு மத்தியில், முக்கால்வாசி முகவரியை சரியாக அப்டேட் செய்திருக்கிறது இந்த டைரி. முகவரியை போட்டோம், கல்லா கட்டினோம் என்றில்லாமல் திரையுலகத்திற்கு தன்னால் ஆன சேவையையும் செய்து வருகிறார் இந்த வெரைட்டி சினிமா டைரியின் உரிமையாளர் வர்கீஸ்.
சூப்பர் சினிமா என்று பாசிட்டிவ் செய்திகள் அடங்கிய இதழ் ஒன்றையும், வருடம் தவறாமல் திரையுலக நட்சத்திரங்களுக்கு விருதுகளையும் வழங்கி வருகிறார் இவர். வெரைட்டி பிலிம் அவார்ட்ஸ் 2008, சினிமாவில் 100/100 என்ற நட்சத்திர கலைவிழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை காமராஜர் அரங்கில் மிக பிரமாண்டமாக இந்த விழாவை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
விழாவில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விருதுகளை பெற இருக்கிறார்கள். அத்துடன், வெரைட்டி சூப்பர் சினிமா இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.ராதாராஜ் எழுதிய 'திரையுலக அதிசயங்கள்' என்ற புத்தகமும் வெளியிடப்படுகிறது. நூலின் முதல் பிரதியை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட, நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி பெற்றுக் கொள்கிறார். இதே விழாவில் திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையும் தருகிறாராம் வர்கீஸ். வாழ்க!
-ஆர்.எஸ்.அந்தணன் |