தமிழ்நாட்டின் பில்கேட்ஸ் என்று பாரதிராஜா பாராட்ட, சந்தோஷத்தில் பூரித்து போனார் நாக்ரவி. தனது இன்சைட் மீடியா நிறுவனத்தின் மூலமாக சிறு முதலீட்டு படங்களை வாங்கியும், பெரிய முதலீட்டு படங்கள் பலவற்றை வெளிநாட்டிலும் ரிலீஸ் செய்தவர்தான் இந்த ரவி.
தமிழ்சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றிய இவரது சிந்தனையும், கண்டுபிடிப்பும் அளித்த வியப்புதான் பாரதிராஜாவின் மேற்கண்ட பாராட்டு. பிலிம்சுருள் பெட்டியை சிரமப்பட்டு எடுத்துச் செல்லும் வேலைகள் இனியில்லை. இதோ இந்த சிப் க்குள் பத்து சினிமாவை அடக்கலாம் என்று நகம் சைசுக்கு இவர் காட்டிய வில்லைதான் வியப்பை தந்தது பலருக்கு. சொன்னதோடு நிற்காமல், வெறும் ஆறரை லட்சத்தில் இவர் தயாரித்த அந்தியூர் மர்மம் என்ற படத்தை இந்த சிப் க்குள் அடக்கி, மேடையில் உள்ள ஸ்கிரீனில் படத்தை ஓடவிட்டார்.
கேசட் ஒழிந்து சிடிகள் வந்தது போல், இனி சிடிகளும் ஒழிந்துவிடும் என்று ஆருடம் கூறிய ரவி, இனிமேல் ஒரு பாடல் பிடித்திருக்கிறது என்பதால், ஐந்து பாடல்கள் கொண்ட படத்தின் மொத்த ஆடியோ சிடியையும் வாங்க வேண்டாம். அந்த ஒரு பாடலை மட்டும் கடையில் பர்சேஸ் செய்து கொள்ளலாம் என்கிறார். இன்சைட் ரீடெயில் என்ற கடைகளை தமிழகம் முழுவதும் திறக்க திட்டமிட்டிருக்கும் ரவி, இக்கடைகளில் ஒரு பாடலை இரண்டு ரூபாய்க்கும், ஒரு படத்தை ஐந்து ருபாய்க்கும் பதிவு செய்து தருகிறார். சின்ன சிப் களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பதிவு செய்து தரவிருக்கிறது இந்த நிறுவனம். தமிழ்சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சி இதுதான் என்கிறார் ரவி.
இவரது தயாரிப்பில் உருவான ஹெட்போன் ஒன்று ஆயிரத்து ஐநூறு ரூபாயாம். இதில் 5000 பாடல்கள் பதிவு செய்து தரப்படும். தேவைப்பட்டால் முந்தைய பாடல்களை அழித்துவிட்டு வேறு பாடல்களையும் பதிவு செய்து கொள்ளலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு கேட்கலாமாம்!
மக்கள் தியேட்டருக்கு போய் பார்ப்பதற்காக படம் எடுத்தவர்கள், இனிமேல் சின்னத்திரையில் ரிலீஸ் செய்தால் போதும் என்பதற்காகவே படம் எடுப்பார்கள். அதுவும் ஒரே நாளில் முதலீடு செய்த பணத்தை எடுத்துவிடுகிற டெக்னிக்குடன் என்கிறார் நாக்ரவி.
ஓவராதான் 'பிலிம்' காட்றாங்க...
-ஆர்.எஸ்.அந்தணன் |