'அடடா என்ன செலவு' என்றே வைத்திருக்கலாம்! ஜெய் ஆகாஷ், நிக்கோல் நடிக்கும் 'அடடா என்ன அழகு' படத்திற்கு இதுவரை ஏழு கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல, சொந்தமாகவே படத்தை திரையிட முடிவு செய்திருப்பதால் அதற்கு தனியாக ஒரு கோடி!
'ஜெய் ஆகாஷ் படங்களுக்கான வியாபாரத்திற்கும், நாங்கள் செய்த செலவுக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும், படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்கிறார் இயக்குனர் டி.ஜெயமுருகன். படமும் நீண்டகால தயாரிப்பு என்று சொல்லும்படி நாட்களை 'ஸ்வாகா' செய்துவிட்டது. ஜெய் ஆகாஷ் கால்ஷீட் சொதப்பியதால்தான் இப்படியா? இயக்குனரிடம் கேட்டால், அவரை முந்திக்கொண்டு பதில் சொன்னார் ஜெய் ஆகாஷ். 'இந்த படத்திற்காக 140 நாட்கள் நடிச்சு கொடுத்திருக்கேன். சண்டை காட்சிகளை மட்டும் 50 நாட்கள் ஷ§ட் பண்ணியிருக்கோம். ஏன் லேட் என்றால், ரகுவரன் சார் நடிச்ச காட்சிகளை மறுபடியும் எடுக்க வேண்டியதா போச்சு. அவரோட காட்சிகளை மட்டும் 40 நாட்கள் ரீ ஷ§ட் பண்ணியிருக்கோம். இப்படி வெவ்வேறு காரணங்களால்தான் லேட்டே தவிர என்னால் இல்லை. ஆனால், இந்த படத்திற்கு இவ்வளவு கோடிகளை செலவு செய்த தயாரிப்பாளருக்குதான் நன்றி சொல்லணும். ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். அதனால்தான் செலவை பார்க்காமல் குவாலிடியை பார்க்கிறார்' என்றார்.
இதற்கு முன்பு நான் இயக்கிய 'நிலவே மலரே' படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. அந்த எதிர்பார்ப்பை இந்த படத்திலும் நிறைவு செய்திருக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் பல வருடங்களுக்கு மக்கள் மனதில் நிற்கும் என்கிறார் டைரக்டர் ஜெயமுருகன். எல்லா பாடல்களையும் இவரே எழுதியிருக்கிறாராம். அப்படின்னா சொல்லிதானே ஆகணும்!
-ஆர்.எஸ். |