தமிழ்சினிமா வரலாற்றில் அழியாத புகழை பெற்றவர் எம்.எம்.நம்பியார். கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்தவர், இன்று நண்பகல் காலமானார்.
தமிழ் திரையுலகத்தால் நம்பியார் சாமி என்று அழைக்கப்படும் இவர், தமிழகத்தில் ஐயப்பன் சுவாமியை அறிமுகப்படுத்தியவர் என்றே சொல்லலாம். ரஜினி உள்ளிட்ட பல்வேறு விவிஐபி களை கேரளாவில் உள்ள ஐயப்பன் சன்னதிக்கு அழைத்துச் சென்றவர். நவாப் ராசமாணிக்கம் என்பவர் ஐயப்பன் புகழை பரப்பும் விதத்தில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவரது நாடகக் குழுவில் நடிக்க சென்றவர் நம்பியார். அன்றிலிருந்து காலமாகும் கடைசி நிமிடம் வரை ஐயப்பனின் புகழை பாடும் ஒரு பக்தராகவே இருந்தார் நம்பியார்.
எம்.ஜி.ஆர்-நம்பியார் கத்தி சண்டை இன்றளவும் ரசிகர்களிடையே கைதட்டல்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தில் எம்.ஜி.ஆரும் இவரும் வாள் சண்டை போடும்போது, எம்.ஜி.ஆரின் வாள்முனை நம்பியாரின் தலையில் காயம் ஏற்படுத்தி விட்டதாம். மறுநாள் நடந்த சண்டைக்காட்சியில், தனக்கு காயம் ஏற்படுத்தியதை போலவே எம்.ஜி.ஆரின் தலையில் காயத்தை ஏற்படுத்தினாராம் நம்பியார். இதையடுத்து இனிமேல் வாள் சண்டையில் போது, வாள் முனையில் ஒரு குண்டு வைத்து முனையை மழுங்க செய்ய வேண்டும் என்று நடைமுறையையே மாற்றினார்களாம்.
ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாகவும், இரண்டாவது ஹீரோவாகவும் நடித்த வந்த இவர், பிற்காலங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ வைத்தார்.
சென்னை கோபாலபுரத்தில் அமைந்திருக்கும் நம்பியாரின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
-ஆர்.எஸ். |