மௌன கீதங்கள் படத்தில் ‘டாடி டாடி ஓ மை டாடி’ என்று பாக்யராஜோடு ஆடிப்பாடிய சுரேஷ், இன்று தாடி வைக்கிற அளவுக்கு பெரிய பையன் ஆகிவிட்டார். அதுமட்டுமல்ல, தெலுங்கில் முன்னணி இயக்குனரும் கூட. தமிழில் வெளிவந்த சித்திரம் பேசுதடி படத்தை தெலுங்கில் இயக்கியதோடு, ஏராளமான வெற்றிப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.
முதன்முறையாக தமிழில் அத்தியாயம் 6 என்ற படத்தை இயக்கவிருக்கிறார். தயாரிப்பு? இவரது காதல் மனைவி காவேரி. தற்போது கல்யாணி என்று பெயரை மாற்றியிருக்கிறார். சமுத்திரம், காசி போன்ற படங்களில் நடித்தவர் இவர். புதுமுகம் ஹரிநாத் கதாநாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நடிக்கிறார் பாலா.
அத்தியாயம், அத்தியாயமாக ஆறு அத்தியாயங்களாக பிரித்து கதை சொல்லியிருக்கிறாராம். இந்த ஆறும் ஆறு வித கலர்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்திரைச் செல்வன் (பொருத்தமான தலைப்புதான்) விசாகப்பட்டினத்தில் மரத்தாலேயே ஒரு வீடு கட்டி அதில் படப்பிடிப்பை நடத்தினார்களாம். எல்லாரும் ஆச்சர்யப்பட்ட அந்த வீடு இப்போது இல்லை. கதைப்படி அதில் குண்டு வெடிப்பதால், நிஜமாகவே குண்டு வைத்து அழித்துவிட்டார்களாம்.
-வில்லேஜ் வினிதா |