ஈ.எல்.கே புரடடெக்ஷன்சுக்காக ஜீவன் நடிக்கவிருந்த பயணிகள் கவனிக்கவும் படம் கைவிடப்பட்டுள்ளது. விஜயகுமார் என்ற புதிய இயக்குனரின் கதையை கேட்டு வியந்த ஜீவன், உடனடியாக இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். ஜீவனின் வியாபார எல்லைகளை தாண்டி இந்த படத்தின் பட்ஜெட் இருப்பதால், தயங்கிக் கொண்டே இருந்த பட நிறுவனம், ஜீவனை மட்டும் வைத்துக் கொண்டு இயக்குனரை கழற்றி விட்டு விட்டதாம்.
ஆனாலும் இந்த கதையின் மேல் காதலுற்ற ஜீவன், வேறு சில கம்பெனிகளுக்கு இயக்குனரை அனுப்பி வைத்தாராம். படத்தில் பாதி ஏரியா ரயிலில் நடப்பதால், ஒருமாதமாவது ரயில் காட்சிகளை எடுக்க வேண்டும் என்கிறாராம் இயக்குனர். அதுவே பட்ஜெட்டின் பெரும் பகுதியை விழுங்கிவிடும் என்பதால் தவிர்த்து வந்தார்கள் தயாரிப்பாளர்கள்.
வேறு வழியில்லாத ஜீவன், இப்போது விஜயகுமாரிடம் வேறு கதையை கேட்டு அதில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்கிடையில் ஸெல்வன் இயக்கும் மன்மத லீலை படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார் ஜீவன். கவிதாலயா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 15-ந் தேதி துவங்குகிறது.
-ஆர்.எஸ்.
|