“விஜய் கொடுத்த விருந்து. அகமகிழ்ந்த அஜீத்!” -இப்படியெல்லாம் செய்திகள் வெளியிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்ட மீடியாவும், பத்திரிகைகளும், எழுதிய ஈரம் காய்வதற்குள் மறுபடியும் இவர்களுக்குள் விரிசல் விழ துவங்கியிருப்பதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
கடந்த வாரம் ஏகன் படப்பிடிப்பிற்காக ஏற்காட்டில் இருந்த அஜீத்தை சந்தித்த அவரது ரசிகர்கள், ஒரு விஷயத்தை சொல்லி குமுறினார்களாம். அவர்களிடம் பொறுமையாக இருக்க சொல்லி அறிவுறுத்திய அஜீத், அவர்கள் போனபின் நெடுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தாராம். அவர் மனதில் ஓடிய எண்ணங்கள் எதுவாக இருக்கும்? விருந்துக்கு போனது தவறென்று நினைத்திருப்பாரா? அல்லது ரசிகர்கள் இப்படிதான் இருப்பார்கள். அலட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்திருப்பாரா? எதுவாக இருந்தாலும், அஜீத்-விஜய் கைகுலுக்கல் அர்த்தமில்லாமல் போயிருப்பது மட்டும் நிஜம்.
குருவி படத்தில், விஜய் ஒரு டப்பா காரை வைத்துக் கொண்டு, ரேசில் ஜெயித்து விடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதை வெறும் காட்சியாக எடுத்துக் கொள்ள முடியாத அஜீத் ரசிகர்கள் இதன் மூலம் விஜய் சொல்ல வந்தது என்ன என்று ஆராய துவங்கினார்கள். “நான் டப்பா காரை வைத்துக் கொண்டே ஜெயிக்கிற ஆள். உனக்குதான் ஹெல்மெட், பாதுகாப்பு உடைகள், விலை உயர்ந்த கார் இவையெல்லாம் வேண்டும். என்னை பொறுத்தவரை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” இதைதான் விஜய் அந்த காட்சியில் உணர்த்துவதாக கருதிய ரசிகர்கள், அஜீத் அலுவலகத்திற்கும், ரசிகர் மன்ற தலைமைக்கும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். சிலர் நேரடியாக அஜீத்தை சந்தித்தே தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
ஆனாலும், வார்னர் பிரதர்ஸ் படத்தில் அஜீத்தின் சம்பளம் பத்து கோடியே பத்து லட்சம் என்பது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிற செய்தி. காரணம், இது விஜய் சம்பளத்தை விட அதிகம்.
-ஆர்.எஸ்.
|