'நடவு' என்ற முதல் நாவல் மூலம், சுமார் பத்து வருடங்களுக்கு முன் எழுத்துலகில் நுழைந்தவர் பொன்.முருகேசன். சமீபத்தில் இவர் எழுதிய 'அனைத்துலகும் இன்பமுற' முருகேசனின் 51-வது நூல். இதில் முழு நாவலை கவிதையாக வடித்திருக்கிறாராம் இவர். இந்த பத்து வருடத்தில் பொன்.முருகேசன் எழுத்துலகிற்கு தனது இனிஷியலையே தந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதை நாம் சொல்வதை விட, எழுத்துலகின் பிதாமகர்கள் சொல்வதுதானே சிறப்பு?
“வைரமுத்துவுக்கு இணையாக எழுதியிருக்கிறார்” என்று பொன்.முருகேசனை வாழ்த்தியிருக்கிறார் எழுத்தாளரும் கார்டூனிஸ்டுமான மதன்! முருகேசனும், வைரமுத்துவும் எழுதிய இசைக்காற்று என்ற ஆல்பத்தை 2007-ம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட மதன் இப்படி பாராட்டியிருக்கிறார் என்றால், பொன்.முருகேசனை நாமும் பாராட்டிதான் ஆக வேண்டும்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர் என்ற பன்முகம் கொண்ட பொன் முருகேசனின், இரு நூல்களை இளம் தொழிலதிபர் முருகவேல் ஜானகிராமன் வெளியிட, மதன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் 'சிந்தனைக்கு சில' என்ற நூல் பற்றி குறிப்பிட்ட மதன், "திருக்குறள் மாதிரி வீரியம் அதிகமுள்ள நூல் இது" என்றாராம்.
-ஆர்.எஸ்.
|