10- ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஜெயா டி.வி. தனது நேயர்களை மேலும் திருப்தி படுத்தும் விதமாக பிரபல சின்னத்திரை இயக்குனர் பிரபு நேபாலுடன் இணைந்து என்ன பொருத்தம் என்ற நிகழ்ச்சியை துவங்கியிருக்கிறார்கள்.
சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்தது. சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் நடந்த போட்டிகளில் வென்ற பத்து ஜோடிகளை மேடையேற்றினார்கள். சும்மா சொல்லக் கூடாது. விதவிதமான ஜோடிகள். விதவிதமான அனுபவங்கள். “நான் எப்போ பார்த்தாலும் கோபப்பட்டுகிட்டே இருப்பேன். அவரும்தான். மதுரையிலே இருந்து சென்னைக்கு நாங்க வந்ததில் இருந்தே சண்டை போடாம இருக்கோம். ஜெயா டி.வி க்கு நன்றி” என்று ஒரு ஜோடி குறிப்பிட அரங்கத்தில் பலத்த கைதட்டல்.
திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகியும், ஹனிமூனுக்கு போகாத ஜோடி ஒன்றும் மதுரையில் இருந்து வந்திருந்தது. “எங்களை எங்கேயும் தனியா அனுப்ப பயப்படுவாங்க. இன்னும் குழந்தையாகவே எங்க வீட்டில் எங்களை நினைப்பதால் வீடே கதின்னு கிடப்போம். இந்த போட்டியில் செலக்ட் ஆனபோது கூட, அடுத்த கட்ட போட்டிக்கு சென்னைக்கு அனுப்ப ரொம்ப பயந்தாங்க. போட்டுக் கொள்ள நகை கூட கொடுக்கலைன்னா பாருங்க. ஆனால், ஜெயா டி.வி புண்ணியத்தில் இப்போ எங்க ஹனிமூன் சென்னையில் நடக்குது. போட்டியிலே ஜெயிக்கிறோமோ, இல்லையோ? இதுவே பெரிய சந்தோஷம்” என்றது இன்னொரு ஜோடி.
அமிதாப்பச்சன் உயரத்தில் இருந்த ஒரு வாலிபருக்கு இது காதல் திருமணமாம். “அவருக்கு சினிமாவில் நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க நினைச்சார். யாராவது அவரை பார்த்திட்டு சினிமாவுக்கு கூப்பிட மாட்டாங்களான்னு நினைப்பு” என்று தனது காதல் கணவரை சீண்டினார் இன்னொரு பெண். இப்படி படப்பிடிப்பு நடந்த அரை மணி நேரத்தில் ஆளுக்கொரு அனுபவத்தை அள்ளி தெளித்தார்கள்.
திடீரென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜோடிகளுக்கு நடுவில் சண்டை வந்து அழ ஆரம்பித்தால் அதையும் காட்டுவீர்களா? என்றோம். அப்படி நடந்தா காட்டுவோம். அதுக்காக செயற்கையா சண்டை போட சொல்லி எடுக்க மாட்டோம் என்றார் பிரபுநேபால். எந்த சேனலை நினைத்துக் கொண்டு இந்த பதிலை சொன்னாரோ, அவருக்கே வெளிச்சம்!
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இரவு 9.30 மணியிலிருந்து 10.30 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது இந்த நிகழ்ச்சி.
-ஆர்.எஸ்.அந்தணன்
|