ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் இந்த மூன்று கட்டளைகளுக்கு பிறகு நடக்கும் சண்டைக்காட்சிகளையே பார்த்து பழகிய முன்னணி இயக்குனர்களுக்கு, நேற்று நடந்த அதிரடி தாக்குதல், பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கும். திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு விறுவிறுப்பையும், வில்லங்கத்தையும் விதைத்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் யார்?
இயக்குனர்கள் சங்கத்தில் மேனேஜராக பணியாற்றும் பாலு என்பவரை கைகாட்டுகிறார்கள் உதவி இயக்குனர்கள். யார் தலைவராக வந்தாலும், பாலுவின் இடம் அவருக்குதான். கதை சொல்ல போகிற இடத்தில் ஹீரோவின் அல்லக்கைகளால் விரட்டப்படும் உதவி இயக்குனர்கள், தனது உறுப்பினர் அட்டையை பதிவு செய்ய இங்கே வந்தால், இங்கேயும் வள் என்று விழுந்து விரட்டி அடிப்பாராம் இந்த பாலு. இவர் ஆர்.கே.செல்வமணியின் நண்பர். செ.மணியின் வழிகாட்டுதலின் பேரில்தான் பாலுவின் இந்த வள் வள்...
இயக்குனர்கள் சங்கத்தில் முன்பு உதவி இயக்குனர்களையும் சேர்த்து 3500 பேர் வரை உறுப்பினர்களாக இருந்தார்களாம். ஆண்டு சந்தாவை சரியாக கட்டாத
உ.இ க்களை சங்கத்திலிருந்து சாதுர்யமாக விலக்கி, அவர்களை மீண்டும் சேர விடாமல் செய்தததில் செல்வமணிக்கு பெரும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 1500 மட்டுமே. 250 ரூபாயாக இருந்த உதவி இயக்குனர்களின் சேர்க்கை கட்டணத்தை 6000 உயர்த்த ஐடியா கொடுத்தாராம். அன்றாட சாப்பாட்டுக்கே அல்லாடும் உதவி இயக்குனர் எப்படி ஆறாயிரம் கொடுத்து சேருவார்? ஒரு படம் இயக்கியவர்களுக்கு ரூ 2000 இருந்த கட்டணத்தை 50 ஆயிரம் ஆக்கிவிட்டார்களாம். இதெல்லாம் புதிதாக வருகிறவர்களுக்கு. ஆனால் லைப் மெம்பர் என்று கூறப்படும் பழம் பெருச்சாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? வெறும் இரண்டாயிரம்! இத்தனை வசூல் செய்தாலும், சங்க உறுப்பினர்களுக்கு ஒரு மெடிக்கிளைம் பாலிசி கூட கிடையாது என்பதுதான் வேதனை என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில உதவி இயக்குனர்கள்.
இந்த முறை நமக்காக நாம்தான் போராட வேண்டும் என்று முடிவெடுத்த உதவி இயக்குனர்கள் தனி அணியாக களத்தில் இறங்கினர். தலைவர், பொருளாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை தவிர பிற பொறுப்புகளில் நின்றனர். அதற்கு முன்னதாக இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து தங்களது கோரிக்கைகளை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தார்களாம். இந்த சந்திப்பை நடக்க விடாமல் தடுத்ததும் செல்வமணிதான் என்கிறார்கள் உதவி இயக்குனர்கள். இந்த நிலையில்தான் நடிகர் ஜே.கே.ரித்தீஷின் நண்பரான பாவா என்ற உதவி இயக்குனர் செல்வமணி கோஷ்டியால் தாக்கப்பட்டிருக்கிறார். இதை கேள்வியுற்ற ரித்தீஷ், தனது அடியாட்கள் படையை செல்வமணி கோஷ்டி மீது ஏவிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர்கள் சங்கத்திற்கு வந்திறங்கிய அந்த குண்டர்கள், நேசம் புதுசு பட இயக்குனர் வேல்முருகன் என்பவரை தாக்கினார்களாம். அதுமட்டுமல்லாமல், இந்த தேர்தல் நடந்தால், பல தலைகள் உருளும் என்று எச்சரித்ததாக தெரிகிறது. இதில் அப்செட் ஆன இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் வழக்கம்போல் முதல்வரிடம் முறையிட, அவரும் என்ன நடந்தது என்று விசாரிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம்.
இந்த மோதல் காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. உலகத்திலேயே பாவப்பட்ட பிறவி உதவி இயக்குனர்தான் என்று பல மேடைகளில் முழங்கி வரும் முன்னணி இயக்குனர்கள், மேலும் மேலும் அவர்களை அடக்க நினைத்தால் இதுதான் நடக்கும். சும்மாவா சொன்னார்கள் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று!
-ஆர்.எஸ்.அந்தணன்
|