சுப்ரமணியபுரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. பாலா, அமீர் இருவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இப்படத்தின் இயக்குனர் சசிக்குமார், இந்த விழாவில் அமீர், கரு.பழனியப்பன், சிம்புதேவன், வெற்றிமாறன் ஆகிய இயக்குனர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
மலையாள சேனல் ஒன்றின் தொகுப்பாளினியாக இருந்தவராம் இப்படத்தின் நாயகி ஸ்வாதி. அவரை பேசவே அழைக்காதது ஏமாற்றம். முன்னதாக திரையிடப்பட்ட மூன்று பாடல்கள், இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஏக்கத்தை வரவழைத்தது! படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் டி.வி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகம் ஆனவர். இவரது இசையை பற்றிய பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் உள்ளே போனவர்களுக்கு, ஜேம்சின் இசை தேவாமிர்தம்!
நெற்றியில் பட்டையை போட்டுகிட்டு மொழுக்குன்னு வந்து நிற்பான் சசி. இவனெல்லாம் தேறவே மாட்டான்னுதான் நினைச்சிருக்கேன். ஒரு முறை என்னிடம் வந்து ஒரு கதை சொல்லணும் என்றான். சரி, நம்மை படுத்த போறான் என்று நினைத்துக் கொண்டே கதை கேட்டேன். அற்புதமாக ஒரு கதையை சொல்லி என்னையே தோற்கடிச்சுட்டான் என்று வெளிப்படையாக பேசினார் அமீர். இந்த படத்தை தனது பேனரிலேயே தயாரிக்க விரும்பிய அமீர், வளரும் நடிகர் ஒருவரிடம் கதை சொல்ல அனுப்பினாராம் சசியை. கதையை கேட்டுவிட்டு அதில் பல திருத்தங்களை சொன்னாராம் அந்த நடிகர். அவர் நடிச்ச படமே இன்னும் வெளியில் வரலை. அதற்குள் அவர் “அதை மாற்று, இதை மாற்று” என்று சொன்னதாக குறிப்பிட்டார் அமீர். (யாரென்று பிறகு விசாரித்தால், அது பாக்யராஜின் மகன் சாந்தனுவாம்)
சில வினாடிகளில் பாஸ் ஆகிவிடுகிற ஒரு ஷாட்டை மனசுக்குள் வாங்கி, அதுபற்றி பேசிய கரு.பழனியப்பனின் உன்னிப்பான பார்வையும் வியக்க வைத்தது. ஒரு பாடல் காட்சிக்கே இத்தனை தூரம் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்றால் முழு படமும் எப்படியிருக்கும்? என்று தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார் கரு.
இந்த வருடம் ரொம்ப விசேஷமான வருடம். பாலா இயக்கிய நான் கடவுளும், நான் நடித்த யோகியும், சசி இயக்கிய சுப்ரமணியபுரமும் வர இருக்கிறது. யாருக்கு வெற்றியோ? என்றார் அமீர். மூன்று பேருமே வெற்றி பெற்றால் அவர்களை விடவும் பெரிய சந்தோஷம் நமக்குதானே!
-ஆர்.எஸ்.அந்தணன்
|