பெரிய நகரங்களில் மேல்தட்டு மக்களிடம் நடைபெறும் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை, உறவு சிக்கல்களை, பாத்திர முரண்பாடுகளை சொல்கிற படம்தான் இந்திரவிழா என்கிறார் அப்படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வர். ஸ்ரீகாந்த், நமீதா, ஹேமமாலினி, விவேக் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால் பாகம் முடிந்துவிட்டதாம். இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி என்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றுபவராக நடிக்கிறார் ஸ்ரீகாந்த். தொலைக்காட்சியின் முதலாளியாக நமீதா. அடைய வேண்டிய உயரத்தை எப்படி வேண்டுமானலும் அடையலாம். அதற்கு உடம்பை மூலதனமாக்கினால் தவறே இல்லை என்று நினைப்பதுதான் நமீதாவின் கேரக்டர். (ம்...பொறுத்தமான கேரக்டர்தான்) இவர்களுடன் நாசர், ரகசியாவும் உண்டு. ரகுவரன் சார்தான் இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது. கொடுத்த தேதியில் படப்பிடிப்புக்கு வர இயலாமல் இருபது நாட்கள் கழித்து வருவதாக கூறியிருந்தார். அவர் இல்லாத பிற காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தோம். அவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு அவரது மரண செய்திதான் வந்தது. இப்போது ரகுவரனுக்கு பதிலாக நடிக்கிறார் நாசர் என்ற ராஜேஷ்வர், அவள் அப்படித்தான், கடலோரக் கவிதைகள், மீண்டும் ஒரு காதல் கதை, போன்ற தமிழ் படங்களுக்கும், இந்தியில் ராஜ்குமார் சந்தோஷியின் பல படங்களுக்கும் கதைகள், திரைக்கதைகள் வழங்கியவர்.
இன்று சினிமா வெறும் புலன்களுக்கு கிளர்ச்சியூட்டு என்ஜாய்மென்டாக இருக்கிறது. புலன்களை தாண்டி அறிவையும், மனதையும் பாதிக்கும் சினிமாதான் நல்ல என்டர்டெயின்மென்ட். என் படம் அர்த்தமற்ற பொழுதுபோக்காக இருக்காது. புலன்களை தாண்டி ஆழமான உணர்வை தரும் படமாக இருக்கும் என்கிறார் கே.ராஜேஷ்வர்.
நமீதாவை வைத்துக் கொண்டு மெசேஜ் சொல்கிறார் என்றால், நல்வரவு சொல்வதில் நமக்கென்ன தயக்கம்?
-ஆர்.எஸ்.அந்தணன்
|