சந்தோஷத்தில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்கள் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் படைப்பாளிகள். ஒட்டுமொத்த தமிழகத்திலிருந்தும் ஒரே வார்த்தை அசரீரி போல் ஒலிக்கிறது... சூப்பர்!
இளசுகள், பெருசுகள், இரண்டுக்கும் இடைபட்ட வாலிப வயசுகள் எல்லாருமே கூட்டம் கூட்டமாக வருகிறார்களாம் தியேட்டருக்கு. "எண்பது வயது பெரியவரை கூட அவரது பேரப்பிள்ளைகள் தியேட்டருக்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க செய்கிறார்கள். நீண்ட காலம் கழித்து குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கிறது தியேட்டரில். ஒரு இயக்குனர் என்பதை மீறி இந்த படத்தின் கதைக்கு நான் ரசிகன்" என்கிறார் இப்படத்தை இயக்கிய ராஜா. "எனது தம்பி ரவியை விட பெரிய அட்ராக்ஷன் ஜெனிலியா ரோலுக்குதான் கிடைக்கும் என்று முன்பே எங்களுக்கு தெரியும். அப்படியிருந்தும், நானும் ஸ்கோர் பண்ணுவேன் என்ற நம்பிக்கையோடு இந்த படத்தில் நடித்த எனது தம்பிக்கு பாராட்டுகள்" என்ற ராஜா, ரவியின் உழைப்பு பற்றி பிரமிப்போடு பேசினார். "கிட்டதட்ட 25 பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடித்தார் ரவி. க்ளைமாக்ஸ் என்பதால் அப்படி அழுத்தமான வசனங்கள். இன்னும் ஐந்து நிமிடம் பேசியிருந்தால் மயக்கம் போட்டிருப்பேன் என்று என் தம்பி சொன்னது இப்போதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
தமிழில் தான் நடித்த படத்தின் முதல் வெற்றி இப்போதுதான். ஐதராபாத்திலிருந்து வந்திருந்தார் ஜெனிலியா. இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்த ராஜாவுக்கும், ரவிக்கும், படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திற்கும் நன்றி என்று ஃபார்மலாக பேசினாலும், ஜெனிலியாவின் கண்களில் வழிகிறது சந்தோஷம். இப்போதே ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம் தமிழில். "நானே இரண்டு மொழிகளிலும் ஹீரோயினாக நடித்திருந்தாலும், இரண்டையும் சமமாக நினைத்துதான் நடித்தேன். இங்குள்ளதை விட அங்கு நன்றாக நடித்திருக்கிறார், அங்குள்ளதை விட இங்கு நன்றாக நடித்திருக்கிறார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார் பளிச்சென்று.
கிட்டதட்ட ஒன்றரை வருடம் காத்திருந்தேன் நல்ல படத்துக்காக. இந்த படத்தை வேறு ஹீரோவை வைத்து இயக்குகிற வாய்ப்பு அண்ணனுக்கு வந்தது. அப்போது, எனது தம்பியை வைத்து இயக்குவதென்றால் இயக்குவேன். இல்லையென்றால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் அண்ணன். ஆனால் யார் யார் கைக்கோ போய் மறுபடியும் இந்த படம் எங்களுக்கே வந்ததுதான் அதிர்ஷ்டம் என்றார் ஜெயம் ரவி.
கிடா வெட்டி பொங்கல் வைக்காத குறையாக சந்தோஷப்படும் இந்த சகோதரர்கள், வெற்றி விழாவை ஜாம் ஜாமென்று கொண்டாடும் முடிவில் இருக்கிறார்கள். பின்னுங்க ராஜாக்களே...
-ஆர்.எஸ்.அந்தணன்
|