கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இருப்பார் சினேகா! பாண்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, அந்த எண்ணத்தில் ஒரு பாறாங்கல்லை போட்டு மூடிய கொடுமையை எங்கு போய் சொல்ல? மாசி மாசம் ஆளான பொண்ணு என்று ரஜினி பட பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். அதில் லாரன்சும், சினேகாவும் ஆடுகிற ஆட்டம் இருக்கிறதே... பயங்கரம்! எப்படி இருந்த சினேகா இப்படி ஆயிட்டார் என்று வருந்திய நேரத்தில் உள்ளே வந்தார்கள் பரத்தும், தனுஷ§ம். இவர்கள் இருவரும் வந்தது லாரன்சுக்காகதானாம். “சுமாரா ஆடுறவங்களையும் நல்லா ஆட வைப்பாரு லாரன்ஸ் மாஸ்டர். நல்லா ஆடறவங்களை இன்னும் நல்லா ஆட வைப்பாரு. அவருடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடணும்” தனது விருப்பத்தை சொன்னார் தனுஷ். லாரன்ஸ் பேசும்போது, “ரஜினி சாருக்கே டான்ஸ் பண்ணியிருக்கேன். அவர் குடும்பத்தை சேர்ந்த தனுஷ் சாரோட சேர்ந்து ஆடணும்னு எனக்கும் நிறைய ஆசை இருக்கு” என்றார்.
பாண்டி படத்தின் தாயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கின் மூன்றாவது படம் இது. முதல் படம் நான் அவனில்லை. அடுத்து அஞ்சாதே. மூன்றாவதாக பாண்டி. லாரன்சிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மேடையில் வழங்கினார் ஜபக். சம்பள பாக்கியை இப்படி மேடையில் வைத்து கொடுக்கிறார்கள் போலும் என்று ஆச்சர்யப்படுகிற நேரத்தில் அந்த தகவலை சொன்னார் லாரன்ஸ். இந்த ஒரு லட்சம் நன்கொடையாக வந்தது. 32 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக நிதி சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஒரு லட்சம் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிவிட்டது. மீதி குழந்தைகளுக்கு வசூல் செய்ய வேண்டும் என்றார். இவர் நடத்தும் அனாதை இல்லத்தில் இருக்கிற குழந்தைகளின் படிப்பு செலவையும், சாப்பாட்டு செலவையும் காலம் முழுவதும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ரஜினி. லாரன்சின் பெரிய மனசுக்கு ஒரு சல்யூட் வைக்கலாமா?
இன்னொரு பாடல் பற்றி சொல்ல மறந்தாச்சே... நமீதாவும், லாரன்சும் ஆடும் ஒரு பாடலில் டபுள் மீனிங்கெல்லாம் இல்லை. ஸ்ரெய்ட்டாக ஒரே மீனிங்தான்! பச்சை பச்சையான வரிகள். பாடலை எழுதி புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறார் பேரரசு. இந்த பாடலுக்கு லாரன்சின் மூவ்மெண்ட்டை பார்த்தால், அடித்த சல்யூட்டை வாபஸ் வாங்கிக் கொள்ளலாம் போலிருந்தது.
-ஆர்.எஸ்.அந்தணன்
|