இம்மாதம் 11-ந் தேதி நடக்கிறது இயக்குனர்கள் சங்க தேர்தல். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தேர்தலில், இம்முறை தலைவர் பதவிக்கு ஆர்.சி.சக்தியும். பாரதிராஜாவும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகிறார்கள்.
போட்டியின்றி பாரதிராஜாவை தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த பலருக்கும் ஆர்.சி.சக்தியின் வேட்பு மனு தாக்கல் புது தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் இதுகுறித்து பேசிய போது “ஜனநாயகத்தின் அடையாளமே போட்டிதான்” என்று கூறி வாபஸ் வாங்க மறுத்துவிட்டார் அவர்.
1400 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், உதவி இயக்குனர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் புதிய கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். தனி அணியாக போட்டியிடும் உதவி இயக்குனர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
சங்க உறுப்பினருக்கு சம்பள பாக்கி இருந்தால் அதை சங்கமே வசூலித்து கொடுக்கும். ஆனால் இயக்குனர் சங்கம் அதற்கான முயற்சியை எடுப்பதே இல்லை. எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளது. போட்டியிடும் இயக்குனர்களே தங்களிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளனர். யாராவது ஒரு பிரபலமான இயக்குனர் வெற்றி பெற்று சங்க தலைவராக வருகிறார். அதன் பிறகு அவர் இந்த சங்கத்துக்கே வருவதில்லை. தன் வீட்டிலேயே சங்கத்தை நடத்துகிறார். சங்கத்தின் பெயரை பயன்படுத்தி முதல்வரை தங்கள் சொந்த நலனுக்காக சந்திக்கின்றனர். தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஏற்கனவே பட்டினியில் வாடும் உதவி இயக்குனர்களை உண்ணாவிரதம், அது இது என்று பல போராட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த சுரண்டலை ஒழித்து உதவி இயகுனர்களின் உரிமையை மீட்கவும், தங்களை காத்துக் கொள்ளவும் இந்த தேர்தலில் முக்கிய பதவிகள் தவிர, மற்ற பொறுப்புகளுக்கு போட்டியிடுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-ஆர்.எஸ்.
|