அவுட்டோர் படப்பிடிப்பு என்றாலே ஆந்திரா, கர்நாடகா பக்கம் போய்விடும் ரஜினி இந்த முறை குசேலனுக்காக சம்மதம் சொன்ன இடம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள அமராவதி நகர். ஏன் தமிழ்நாட்டை தவிர்க்கிறார் சூப்பர் ஸ்டார்?
அவர் போகிற இடத்தில் எல்லாம் கூட்டம் கூடி விடுவதாலும், பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாலும் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தார் அவர். எதை நினைத்து அவர் தமிழகத்தை தவிர்த்திருந்தாரோ? அது நடந்தேவிட்டது. இங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருவதை போலவும், பள்ளி மாணவர்கள் அவரை வரவேற்க இருபுறமும் நின்று பூக்களை தூவுவது போலவும் காட்சி. ரஜினி மைக்கில் பேச, மேடைக்கு முன்னால் அப்பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் திரண்டு நிற்பது போலவும் எடுக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுற்று வட்டாரத்திலிருந்து டிராக்டரில் ஆட்களை அழைத்து வந்தார்களாம். அவர்களுக்கு தலா அறுபது ரூபாய் சம்பளம். இரண்டு வேளை சாப்பாடு.
இப்படி திரட்டி வரப்பட்ட பொதுமக்களும், மாணவ மாணவிகளும் சாப்பாடு இல்லாமல், அலைகழிக்கப்பட்டதுதான் இப்போது பிரச்சனையாக வெடித்திருக்கிறது. காலையில் இருந்து நாங்கள் படுகிற அவஸ்தை ரஜினிக்கு தெரியுமா, அல்லது தெரியாதா? அவர் வெளியில் வந்து நடித்துவிட்டு மீண்டும் அந்த வேனுக்குள் (கேரவேன்) போய்விடுகிறார். எங்களை கண்டு கொள்ளவே இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள்.
இதுகுறித்து விளக்கம் தெரிவிக்கும் தயாரிப்பு நிர்வாகிகள், நடிப்பவர்களுக்காக நாங்கள் தயார் செய்திருந்த சாப்பாட்டை பொதுமக்கள் உள்ளே புகுந்து சாப்பிட்டு விட்டு போய்விடுகிறார்கள். அதனால்தான் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டது. இனி அது சரி செய்யப்படும் என்கிறார்கள். படத்தை இயக்குகிற பி.வாசு, உலகமே கொண்டாடுகிற இமயத்தை வைத்து இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டுக்குள்ளே ரஜினி சாரை வைத்து வெளிப்புற படப்பிடிப்பு நடத்துவது எவ்வளவு சென்சிட்டிவான விஷயம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. பொதுமக்களை படப்பிடிப்புக்கு பயன்படுத்தும்போது இப்படி சிக்கல்கள் வந்துவிடுகிறது. இருந்தாலும் இதை சரிபண்ண முயற்சி செய்கிறேன் என்கிறார்.
எப்படி சரி பண்ணுவாராம்? வேறொன்றுமில்லை. இனிமேல் இதுபோன்ற காட்சிகளை எடுக்கும்போது அதை ஸ்டுடியோவிற்குள் செட் போட்டு எடுப்பார். பொதுமக்களுக்கு பதிலாக துணை நடிகர்கள் நடிப்பார்கள். பிரச்சனை விட்டதல்லவா?
-ஆர்.எஸ். |