பேசாமல் 'பாண்டிச்சேரியில் காவேரி' என்று பெயர் வைத்திருக்கலாம். மாஸ்கோவின் காவேரி படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொல்லும் போது, ஐம்பது சதவீத படப்பிடிப்பு மாஸ்கோவில் இருக்க வேண்டும் என்றாராம் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ரவிவர்மன். அப்போது தலையாட்டிய ஆஸ்கார் ரவிச்சந்திரன், தசாவதாரம் பட்ஜெட் எகிற எகிற, மாஸ்கோவை பாண்டிச்சேரியாக்கி விட்டாராம். அங்குதான் பெரும்பாலான பகுதி எடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் தனது படத்தை முடித்துக் கொடுக்காமல் விஜய் நடிக்கும் வில்லு படத்தை ஒளிப்பதிவு செய்ய போய்விட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் ரவிவர்மன் மீது புகார் கொடுத்திருக்கிறார் ரவிச்சந்திரன். விசாரித்தால் வெவ்வேறு உண்மைகள் வெளிப்படுகிறது. வெறும் ஒளிப்பதிவுக்கே 75 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் ரவிவர்மன், இயக்குனர் வாய்ப்பு கிடைத்ததால், அந்த சம்பளத்தை தியாகம் செய்து விட்டாராம். முதல் பட இயக்குனருக்கு வழக்கம் போல் சம்பளம் நஹி! ஆக, தர்மம் தலைகாக்கும் என்ற அடிப்படையில் உருவாகி வருகிறது மாஸ்கோ! மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துக் கொண்டு, வேறு எங்கும் போக கூடாது என்று கடிவாளம் போடுகிறாராம் தயாரிப்பாளர்.
அந்த ஒரு நாள் எப்போது சொல்லுங்கள். வந்து இயக்கி தருகிறேன் என்கிறாராம் இயக்குனர். பிரச்சனை சீக்கிரம் முடிவுக்கு வந்தால், காவேரியை கண்ணில் பார்க்கலாம். ஆனால், இவ்வளவு களேபரத்துக்கு பிறகும் படம் பிரமாதமாக வந்திருப்பதுதான் ஆச்சர்யம் என்கிறது கோலிவுட்!
-ஆர்.எஸ். |