தேர்தல் என்றாலே கட்சித்தாவல் இருக்குமல்லவா? தயாரிப்பாளர் சங்க தேர்தல் களைகட்டி வரும் நேரத்தில் இரண்டு பேர் அணி மாறியிருப்பது தேர்தல் சூட்டை மேலும் அதிகரித்துள்ளது. இயக்குனர்கள் அமீர், எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் இராம.நாராயணன் அணிக்கு எதிர் அணியில் இருந்தார்கள். பிறகு அவர்களை அழைத்து பேசிய பாரதிராஜா, இருவரையும் அங்கிருந்து விலக வைத்திருக்கிறார். இது குறித்து பேசிய எஸ்.ஏ.சி, 'நான் திசைமாறி போகவில்லை. இராம.நாராயணன் தேர்தலில் நிற்கிறார் என்றதும் முதல் வாழ்த்துகளை அவருக்கு சொன்னது நான்தான்' என்றார்.
பஞ்சு அருணாசலம் அணியில் ராதிகா இருக்க, எதிர் அணியில் குஷ்பு இறங்கியிருப்பது பலருக்கும் ஆச்சர்யம். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய குஷ்பு, கடந்த இரண்டு வருடங்களாக இராம.நாராயணன் செய்த நன்மைகளை அனைவரும் அறிவார்கள். எதிர் அணியினரை குறை சொல்லி பேசினால் அது நமக்கு நாமே சண்டையிட்டு கொள்வது மாதிரி ஆகிவிடும். கடந்த தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்த முறை நடக்கக் கூடாது. தேர்தலுக்கு பிறகு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
தனது மாயக்கண்ணாடி ரிலீஸ் ஆனபோது இந்த சங்கம் என்னென்ன உதவிகள் செய்தது என்பதை பட்டியலிட்டார் இயக்குனர் சேரன். பெருந்திரளாக வந்திருந்த தயாரிப்பாளர்கள் இராம.நாராயணன் அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து பேசினார்கள்.
-ஆர்.எஸ்.
|