குசேலன் படத்தின் தெலுங்கு பதிப்பில் ஆடுகிற புளோரா, தமிழ் குசேலனில் ஆட முடியவில்லை. காரணம், நடிகர் சங்கம் அவருக்கு போட்டிருந்த தடை. நடிகர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் இருக்கிறதே தவிர, தமிழ் படங்களை தாண்டி அவர்கள் போடும் தடை செல்லாமல் போய்விடுகிறது என்று தயாரிப்பாளர் சங்க தேர்தலின் போது கேள்வி எழுப்பட்டது. அப்போதே புளோராவுக்கு தடையை நீக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தாராம் நடிகர் சங்க தலைவர்.
பொருத்தமாக, நீதிமன்றமும் புளோராவின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்ததுடன், அவர் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்ல தடையில்லை என்றும் கூறிவிட்டது. இதையடுத்து புளோரா மீது போட்டிருந்த தடையை நீக்கியிருக்கிறது நடிகர் சங்கம். அவர் தமிழ் படங்களில் நடிக்க தடையில்லை என்றும் கூறியிருக்கிறது. இதுவரை தமிழ் படங்களில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை புளோரா. ஏதோ நடிகர் சங்கம் தடை போட்டதால்தான் தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை என்கிற மாதிரி பேசி வந்த அவர், இனிமேல் தமிழுக்காக தனி கவனம் செலுத்துவார் போலிருக்கிறது.
முக்கிய தகவல் என்னவென்றால், தனது பெயரை மயூரி என்று மாற்றிவிட்டாராம். அந்த பெயரிலும் ஒரு பாஸ்போர்ட் எடுப்பாரா? என்பதுதான் தெரியவில்லை.
-ஆர்.எஸ்.
|